அரசு பதில்கள்
அரசு பதில்கள், குமுதம் பு(து)த்தகம், 306, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை 10, பக். 192, விலை 150ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-307-4.html
கலை, இலக்கியம், சினிமா, அரசியல், சமூகம், அறிவியல், உலக அறிவு, நாடகம், விளையாட்டு, மொழிபெயர்ப்பு, விமரிசனம் என்று எல்லாமும் அடங்கிய ஒரு கருத்துப் பெட்டகம்தான் அரசு பதில்கள். ஒவ்வொரு பதிலிலும் வாழைப்பழத்தில் ஊசிஏற்றுவதுபோல ஒரு விமர்சனம் இருக்கும். எல்லா பதிலும் ஆழ்ந்த பட்டறிவும் ஒரு தேடலும் இருக்கும். வயது வித்தியாசம் இன்றி ரசிக்க முடியும். இந்தியாவின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்ற கேள்விக்கும் பதில் இருக்கிறத. விசிலடிக்கத் தெரியுமா? என்ற கேள்விக்கும் பதில் இருக்கிறது. மனிதன் படிக்க வேண்டிய பாடம் என்ன? என்ற கேள்விக்கு மனிதம் என்ற பதிலில் உள்ள உண்மை பலரை வியப்படைய வைத்திருக்கும். இது 1977ஆம் ஆண்டு வந்த பதில்கள் மட்டுமே. நன்றி; குமுதம், 11/9/2013.
—-
தமிழ்மொழி வரலாறு, தெ.பொ. மீனாட்சி சுந்தரனார், செல்லப்பா பதிப்பகம், மதுரை 1, பக்.312, விலை 140ரூ.
தமிழ்மொழி உருவான வரலாற்று அடிப்படைச் சான்றுகள் எவையெவை என்பதை மொழியின் தன்மை, மொழியின் மாறுபடும் இயல்பு, ஒலியனியல், உருபொலியனியல், உருபனியல், தொடரியல், தமிழ்ச் சான்றோர் இயற்றிய இலக்கண நூல்கள், உரையாசிரியர்கள், வெளிநாட்டவர் எழுதிய இலக்கணங்கள், அகராதிகள், கல்வெட்டுகள், பிற மொழியாளர்களின் குறிப்புரைகள், கிளைமொழிகள் முதலியவற்றின் மூலம் சான்று காட்டியுள்ளார். இடையிடையே எச்சரிக்கையும் விடுத்துள்ளார். காரணம், மேற்கூறியவற்றை ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொள்கின்றபோது மிக்க கவனத்துடன் பயன்படுத்துதல் வேண்டும். முதலாவதாகப் பல நூல்களுக்கு நல்லனவும் நம்பக்வடியதுமான பதிப்புக்கள் இல்லை. பல நூல்கள் பதிப்பிக்கப் பெறாமல் உள்ளமையால் அவற்றை ஏடு அல்லது கையெழுத்துப்படி நிலையிலேயே ஆராய வேண்டியுள்ளது. அப்படியே நூல்கள் மிக நல்ல முறையில் கிடைப்பதாகயிருந்தாலும், அவை பழையனவும் புதியனவுமாகிய வழக்காறுகளைக் கொண்ட அருங்காட்சியகமாகவே உள்ளன என்கிறார் தெ.பொ. மீ.மேலும் மூலத் திராவிட மொழி, தென் திராவிட மொழியும் தமிழும், குகைக் கல்வெட்டுகளின் மொழி, தொல்காப்பியத் தமிழில் ஒலியனியல், உருபனியல் மற்றும் சங்கத்தமிழ், சோழர், பாண்டியர், பல்லவர்காலத் தமிழ் 20ஆம் நூற்றாண்டுத் தமிழ், தமிழ்மொழியின் புற வரலாறு, ஆகியவற்றின் ஒட்டுமொத்த வரலாற்றை மிக விரிவாக விவரித்துள்ளார். அந்தந்த கால கட்டங்களில் தமிழ் எழுத்துகளும், தமிழ்ச் சொற்களும் அடைந்த பல மாற்றங்கள், அவற்றுக்கான சான்றுகள் எனப் பலவும் உள்ளன. இலக்கண மாணவர்களும், மொழி ஆராய்ச்சி வல்லுநர்களும் அவசியம் தங்கள் கைகளில் வைத்திருக்க வேண்டிய நூல். நன்றி: தினமணி, 15/9/2013.