தமிழ்நாட்டுப் பாளையக்காரர்களின் தோற்றமும் வீழ்ச்சியும்

தமிழ்நாட்டுப் பாளையக்காரர்களின் தோற்றமும் வீழ்ச்சியும், பேராசிரியர் கே. ராஜய்யன், தமிழில்-நெய்வேலி பாலு, கருத்துப்பட்டறை, 2, முதல்தளம், மிதேசு வளாகம், 4வது நிறுத்தம், திருநகர், மதுரை 6, விலை 120ரூ.

முதலாவது இந்திய சுதந்திரப் போராட்டம் என்று சொல்லப்படும் சிப்பாய்க் கலகம் வட இந்தியாவில் நடந்தது 1857ல். அதற்கு 50 ஆண்டுகளுக்கு முன்னதாகவே விடுதலை வேள்வி தென் இந்தியாவில் குறிப்பாகத் தமிழகத்தில் வளர்த்தெடுக்கப்பட்டது. அந்த வீரக் கதையின் அழுத்தமான வரலாறுதான் இது. அந்தக் காலத்தில் இருந்த நிர்வாக அமைப்பு என்பது பாளையங்கள். இதனை ஆட்சி செய்தவர்கள் பாளையக்காரர்கள். இந்தப் பாளையக்காரர்களுக்கு கீழே கிராம அமைப்புகள் இருந்தன. பாளையக்காரர்களுக்கு மேலே கர்நாடக நவாபுகளின் ஆட்சி அமைந்திருந்தது. நெல்லை, ராமநாதபுரம், மதுரை, திண்டுக்கல் மற்றும் திருச்சி வட்டாரங்கள் பாளையக்காரர்களின் ஆட்சிப் பகுதியாக இருந்தன. நெல்கட்டுசெவல் பூலித்தேவனும் பாஞ்சாலங்குறிச்சி கட்டபொம்மனும் இன்னும் உயிரான பாத்திரங்களாக இந்த மண்ணில் உலா வருகிறார்கள். இந்த பாளையக்காரர்களின் எழுச்சியைச் சொல்லி அந்தக் காலகட்டத்துக்கு நம்மை அழைத்துச் செல்கிறது இந்தப் புத்தகம். பாளையக்காரர்கள் போர் மற்றும் சுதந்திரத்தில் இயற்கையாகவே பற்று உள்ளவர்கள். பாளையக்காரர்கள் ஆயுதப் படைகளை வைத்திருக்க அனுமதிக்கும் வரை அவர்களது நடத்தை எதிர்ப்பாகத்தான் இருக்கும் என்று ஆங்கிலேயர்கள் நினைத்ததை ராணுவ ஆவணங்களில் இருந்தே ஆதாரங்கள் காட்டுகிறார் கே.ராஜய்யன். சிவகங்கையில் மருதுபாண்டியர், திண்டுக்கல் கோபால் நாயக்கர், ஆனைமலை யாதுல நாயக்கர் ஆகிய மூவரும் இணைந்து தென் இந்தியக் கிளர்ச்சிக்கான ஒரு பேரவையை உருவாக்குவதில் ஈடுபட்டதும் தமது நோக்கமாக தென்னிந்தியக் கூட்டாட்சியை உருவாக்க வேண்டும் என்று பிரகடனம் செய்ததும் அதற்கு முன் வட இந்தியாவில் நடந்திராத அரசியல் முன்னெடுப்புகள், இந்த நிகழ்ச்சிகள்தான் ஆங்கிலேயருக்கு பெரிய நெருக்கடியை உருவாக்கி, பாளையக்காரர்கள் அனைவரையும் அழித்து ஒழிக்க வேண்டும் என்று முடிவெடுக்கவும் தூண்டியது. 1799-1801 ஆண்டுகளில் அழிக்கும் படலம் முழுமையாக நடந்து முடிந்தது. இரண்டரை நூற்றாண்டு காலமாக செழித்துவந்த பாளையக்காரர்கள் ஆட்சிமுறை, அடக்குமுறை மூலமாக துடைத்தெறியப்பட்டது. அதனை தங்களது நெஞ்சுரத்தின் மூலமாக எதிர்த்த கதை மலைப்பை ஏற்படுத்துகிறது. லட்சிய தாகமும், நெஞ்சுரமும் பெற்ற ஒருசிலர் இருந்தால் அவர்களால் பல்லாயிரம் பேரை வழிநடத்திப் போராட்டக் களத்தில் இறக்கமுடியும் என்பதற்கு உதாரணமாக இந்த பாளையக்காரர்கள் இருந்துள்ளார்கள். அவர்களிடம் இருந்து படிக்க வேண்டிய பாடம் இதுதான். -புத்தகன் நன்றி: ஜுனியர் விகடன், 8/9/2013.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *