சேரன் குலக்கொடி
சேரன் குலக்கொடி, பூம்புகார் பதிப்பகம், 127, பிரகாசம் சாலை, (பிராட்வே), சென்னை 108, விலை 425ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0002-143-2.html
வீரமும் காதலும் விளங்கத் தோன்றிய பழந்தமிழகத்தின் வரலாற்றினை நிலைக்களனாகக் கொண்டு, மனதை மயக்கி மகிழவைக்கும் சொக்கு நடையில் படைக்கப்பட்ட ஒரு வரலாற்றுப் புதினம். சேரன் செங்குட்டுவனின் மனையாள், வேண்மாள், வேண்மாளின் தங்கை பொற்கொடி, அழகின் திரட்சியும், அறிவின் முதிர்ச்சியும், பண்பின் ஒசிவும், அன்பின் கசிவும் கொண்டு திகழ்ந்த பொற்கொடிகள் சேரன் குலக்கொடி. அவள் கற்பின் கனலியாக பொற்பின் செல்வியாக காலத்தின் நெஞ்சில் கனிந்து காட்சி தரும் பாத்திரப்படைப்பாக படைக்கப்பட்டு இருக்கிறாள். நாவலாசிரியர் கோவி. மணிசேகரன் இசை பயின்றவர். நாட்டியக்கலை நுட்பம் தெரிந்தவர். எனவே இசையும் நாட்டியக் கலை நுணுக்கங்களும் நன்கு இடம் பெறச் செய்துள்ளார். தமிழ்நாட்டு அரசின் பரிசு பெற்ற இந்நாவல் தமிழ் இலக்கிய வரலாற்றில் முக்கிய இடம் பெறும். நன்றி: தினத்தந்தி, 4/9/2013.
—-
திரு-பூர்வீக-சதிர்-அரவிந்த அப்பாதுரை, பாலம் பதிப்பகம் (பி) லிட், சென்னை 42, பக். 204, விலை 150ரூ.
பிரான்சிலிருந்து இரண்டு ஆண்கள், இரண்டு பெண்கள் இந்தியாவுக்கு வருகிறார்கள். அவர்களில் ஒருவர் பாண்டிச்சேரியை சொந்த ஊராகக் கொண்ட தமிழர். எனவே பாண்டிச்சேரியில் தங்குகிறார்கள். அவர்களில் மூவர் தங்களின் முன்னோர்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்று நம்புகிறார்கள. பிரிட்டிஷார் காலத்தில் கூலி வேலைக்காக மலேசியா, இலங்கை, மொரிஷீயஸ் போன்ற நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டவர்களின் வழித்தோன்றல்களாகத் தங்களைக் கருதிக்கொள்கிறார்கள். அவர்களுடைய முன்னோர்கள் வேர்விட்டு வளர்த்த மண்ணைத் தேடி வருகிறார்கள். சில மாதங்கள் தங்கியிருக்கிறார்கள். இருந்தும் இந்த மண்ணோடு ஒன்ற முடியவில்லை. நாவலின் இறுதியில் எந்த மண்ணில் அவர்கள் தற்போது வாழ்கிறார்களோ, அங்கேதான் தங்களுடைய வேர்கள் இருக்கின்றன என்பதைக் கண்டுபிடிக்கிறார்கள். எந்த இசையை அவர்கள் கேட்கிறார்களோ அதில் அவர்களின் வேர் இருப்பதாகத் தெரிந்து கொள்கிறார்கள். தங்களுடைய பரம்பரை வேர்களைப்பற்றிய சிந்தனைகளை அவர்கள் அறவே இழக்கிறார்கள். தமிழர்கள் உலகம் முழுக்க பரவி வாழும் காலத்தில் தமது வேர்களைப் பற்றி அதிகம் கவலை கொள்ளாமல் வாழ்வதற்கான புதிய மதிப்பீடுகளை நாவல் முன் வைப்பதே இதன் சிறப்பு. படிப்பதற்கு வெகு சரளமாக, அலுப்பூட்டாமல் செல்வது குறிப்பிடத்தக்கது. நன்றி: தினமணி, 12/3/2012.