இரோம் சர்மிளா
இரோம் சர்மிளா, பி. சிறீராஜ், மு.ந. புகழேந்தி, எதிர், 96, நியூ ஸ்கீம் ரோடு, பொள்ளாச்சி 2, பக். 176, விலை 120ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-450-4.html
உடல் உள்ளுறுப்புகள் அனைத்தும் பாதி செயலிழந்து, வெளுத்துப்போய், மாதவிடாய் நின்று 10 ஆண்டுகளுக்கு மேல் இன்னும் பிடிவாதமாக உண்ணாவிரதம் இருக்கும் இந்தியாவின் இரும்புப் பெண்மணி. மணிப்பூரைச் சேர்ந்த இரோம் சர்மிளாவின் வாழ்க்கைக் கதையே இந்த நூல். மலையாளத்தில் பி. சிறீராஜ் எழுதிய நூலை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார் மு.ந. புகழேந்தி. உலகின் நீண்டகால உண்ணாநிலை போராட்டம் இரோம் சர்மிளாவுடையது. அவரது ஒரே கோரிக்கை, மணிப்பூரில் அமலில் இருக்கும் ஆயுதப்படைச் சிறப்புச் சட்டத்தை மத்திய அரசு உடனே விலக்கிக் கொள்ள வேண்டும் என்பதுதான். ஏனெனில் அந்தச் சட்டம் மணிப்பூர் மக்களின் அன்றாட வாழ்க்கையையே நரகமாக்கிவிட்டது. ஆயுதப் படை யாரையும் சுடலாம், யார் வீட்டுக்குள்ளேயும் எப்போது வேண்டுமானாலும் நுழையலாம். அவர்களைக் கேள்வி கேட்க முடியாது. நடுராத்திரியில் துப்பாக்கியுடன் வீட்டுக்குள் புகுந்து, தூங்குபவர்களை இழுத்துச் செல்வது, இளைஞர்களை சிறையில் அடைத்து, பிறப்புறுப்பில் மின்சாரம் செலுத்துவது, பெண்களை நடுத்தெருவில் கட்டிவைத்து துப்பாக்கியால் சுடுவது என ஆயுதப் படையின் அத்துமீறல்கள் ஒவ்வொன்றும் பதைபதைக்கவைக்கின்றன. பேருந்துக்காகக் காத்திருந்த 10 பேரை ராணுவம் கண்மூடித்தனமாகச் சுட்டுக் கொன்றதை நேருக்குநேர் பார்த்த பிறகுதான், இதை எப்பாடுபட்டேனும் தடுத்து நிறுத்த வேண்டும் என்ற தீர்க்கமான முடிவுக்கு வந்தவர் சர்மிளா. மணிப்பூர் மக்களின் வாழ்க்கைமுறை, கலாசாரம், பழக்கவழக்கங்கள் என வரலாற்று ஆதாரத்தோடு தொடங்கும் இந்த நூல் மணிப்பூர் பெண்களின் போராட்டக் குணங்களை பல்வேறு உதாரணங்களுடன் விளக்குகிறது. மன்னராட்சியோ, மக்களாட்சியோ, அதிகாரத்தை எதிர்த்துப் போராடுவதில் மணிப்பூரிகள் ஒருபோதும் தயக்கம் காட்டியதே இல்லை. அப்படிப்பட்ட கடந்தகாலப் போராட்டம் பலவற்றுக்கும் பெண்களே தலைமை ஏற்றுள்ளனர். இந்த மரபில் வந்தவர்தான் இரோம் சர்மிளா. சர்மிளாவின் உடல், இப்போது தளர்ந்துவிட்டது. ஆனால், போராட்டக்குணம் மேலும் வலுவடைந்திருக்கிறது. இன்னும்கூட மணிப்பூரில் ஆயுதப் படைச் சிறப்புச் சட்டம் விலக்கிக்கொள்ளப்படாத நிலையில் பத்திரிகைகளுக்கு செய்தியாக, அரசின் பார்வையில் ஒரு குற்றவாளியாக தன் போராட்டத்தைத் தொடர்கிறார் சர்மிளா. இது எனக்கு வழங்கப்பட்டுளள் கடமை. நிச்சயம், சத்தியம் வெல்லும் என்பது சர்மிளாவின் நம்பிக்கை. நன்றி:விகடன், 2/10/13.