சங்கர காவியம்
சங்கர காவியம், டால்மியாபுரம் கணேசன், அகஸ்தியர் பதிப்பகம், 39, நந்திகோவில் தெரு, தெப்பக்குளம், திருச்சி 2, விலை 250ரூ.
காஞ்சி பெரியவர் சங்கராச்சாரியாரின் ஆன்மிக வாழ்க்கையின் சில பகுதிகள் நாடக வடிவில் தொகுக்கப்பட்டிருக்கிறது. இந்த தொகுப்பில் அவர் எத்தனை பெரும் அருளாளர் என்பதும், பாமரனுக்கும் இரங்கும் கருணாமூர்த்தி என்பதும் நெஞ்சில் பரவசமாய் பதிந்து போகின்றன. எத்தனை துயர நிலையில் ஒருவர் வந்தாலும் அவரை பசியமரத்தி ஆற்றுப்படுத்தும் மகானின் கருணை உள்ளம் பக்தர்களை எந்தெந்த விதமாய் குளிர்வித்தது என்பதையும், நடுநடுவே சொல்லிப் போயிருப்பது நெஞ்சார்ந்த சிலிர்ப்பு. நன்றி: தினத்தந்தி, 16/10/2013.
—-
புதுக்கோட்டை மிருதங்கம், கஞ்சிரா மகாவித்வான் ஸ்ரீமான் தக்ஷிணாமூர்த்தி பிள்ளை அவர்கள் வாழ்க்கை வரலாறு, தொகுப்பு -ஆர். தாயுமானவன், அகஸ்தியர் புக் டெப்போ, 9 ஏ, கிளைவ்ஸ் பில்டிங், 33, நந்தி கோயில் தெரு, திருச்சி 2, ப். 244, விலை 100ரூ.
நமது கர்நாடக சங்கீதம் வெறும் இசை என்பதோடு மட்டுமல்லாது, பாரம்பரிய விசேஷங்கள், முன் தலைமுறை ஜாம்பவான்களின் வாழ்கை சரிதங்கள் எல்லாம் பிணைந்தது என்பது அதன் சிறப்பு. அந்த வகையில் மிருதங்கம் கஞ்சிரா வித்வான் புதுக்கோட்டை தக்ஷிணாமர்த்தியின் வாழ்க்கை சரித்திரத்தையும் கலையின் விசேஷத்தையும் சுருக்கமாக கூறும் வித்தியாசமான புத்தகம் இது. தாமாகவே கடம் வாசிக்கப் பழகிக் கொண்ட புதுக்கோட்டை தக்ஷிணாமூர்த்தி பின்னர் முறையாக மிருதங்கம் பயின்று லய மேதையாகத் திகழ்ந்தார். மிருதங்கத்தில் நன்கு அறியப்பட்ட வித்வானாக மின்னிக் கொண்டிருந்தபோதுதான், கஞ்சிரா வாசிக்கப் பயின்றார். மிருதங்கம், கஞ்சிரா வாசிப்பில் புது ரீதிகளை புகுத்தி ஈடு இணையற்ற வல்லவராய் விளங்கினார். சிறு வயதிலிருந்தே ஆன்மிக ஈடுபாடும் வளர்ந்துகொண்டே வந்ததில், இல்லறத்தைத் துறந்தார். முன்னரே நிச்சயித்த வேளையில் தனது உயிரை ஒடுக்கி ஜீவன் முக்தரான யோகி அவர். ஓர் அரிய வாழ்க்கை வாழ்ந்தவரின் சமகாலத்து வித்வான்கள். பிற பிரபலஸ்தர்களான 45 பேருடைய அதிசயத்தக்க அனுபவக் குறிப்புகள், சிறு கட்டுரைகளைத் தொகுத்திருப்பது சிறப்பு. லய நிர்ணயத்துக்காக அவர் பயின்ற பாடம் அவர் கையாண்ட அபூர்வமான கோர்வைகள் தொகுக்கப்பட்டிருப்பது சிறப்பு. லய நிர்ணயத்துக்காக அவர் பயின்ற பாடம், அவர் கையாண்ட அபூர்வமான கோர்வைகள் தொகுக்கப்பட்டிருப்பது வாத்தியக் கலைஞர்களுக்கு மிக பயனுள்ளவையாக இருக்கும். நன்றி: தினமணி, 6/10/13.