ஈழம் எதிர்ப்பு அரசியலின் எதிர்காலம்

ஈழம் எதிர்ப்பு அரசியலின் எதிர்காலம், யமுனா ராஜேந்திரன், அடையாளம், 1205/1, கருப்பூர் சாலை, புத்தாநத்தம், திருச்சி மாவட்டம், விலை 550ரூ.

விடுதலைப் புலிகளை ஆராதிக்கும் புத்தகங்கள் அதிகம். விடுதலைப் புலிகள் என்றாலே பாசிஸ்ட்டுகள் என்று பாய்ந்து பறாண்டும் புத்தகங்களும் அதைவிட அதிகம். ஒரு விடுதலைப் போராட்ட அமைப்பை அதற்கான பலம், பலவீனங்களுடன் நடுநிலைமை தவறாமல் எழுதப்பட்டுள்ள புத்தகங்கள் குறைவு. அதில் ஒன்று யமுனா ராஜேந்திரனின் இந்தப் புத்தகம். எதைப் பற்றி எழுதினாலும் அதனுடைய நுண்மையான அரசியலுக்குள் நுழைந்து, சகல தரப்பையும் அலசி ஆராய்ந்து எழுதக் கூடியவர் யமுனா ராஜேந்திரன். அதனையே ஈழப் பிரச்னையிலும் கடைப்பிடித்துள்ளார். ஈழம், இந்த நூற்றாண்டின் மாபெரும் துயரம். அந்தப் பச்சைப் படுகொலைக்கான தண்டனையோ, பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களுக்கான நிவாரணமோ இதுவரை இல்லை. அங்கு ஒரு தேர்தல் நடந்து தமிழ் பிரதிநிதிகள் வெற்றி பெற்றுள்ளார்கள் என்பதைத் தவிர, எந்த முன்னேற்றமும் இல்லை. புலம்யெர்ந்த நாடுகளில் மே, நவம்பர் மாதங்களில் புலிக்கொடிகள் பறக்கின்றன. தமிழ்நாட்டு அரசியல் மேடைகளில் எப்போதும் போல இப்போதும் இது முக்கியமான விவாதப் பொருள். இந்த சூழ்நிலையில் ஈழப் போராட்டத்தை எப்படிப் பார்க்க வேண்டும் என்பதை இந்தப் புத்தகம் கற்றுத் தருகிறது. சகோதரப் படுகொலைகள், ராஜீவ் காந்தியின் கொலை, யாழ்ப்பாணத்தில் இருந்து முஸ்லிம் மக்களை திடீரென வெளியேற்றியது ஆகிய மூன்றும் விடுதலைப்புலிகள் அமைப்பின் மிக முக்கியமான தவறு. தமது இயக்கத்தின் அரசியல் தவறுகள் பற்றியும், சகோதரப் படுகொலைகள் பற்றியும் தமது இயக்கத்தின் மனித உரிமை மீறல்கள் பற்றியும் பின்னாளில் குர்திஸ் விடுதலை இயக்கத் தலைவர் அப்துல்லா ஒச்சலான் வெளிப்படையாக சுயவிமர்சனம் செய்துகொண்டார். ஆனால், அதனை புலிகள் அமைப்பு செய்யத தவறயிது. ஒரு கொரில்லா ராணுவத்தை மரபு ரீதியான ராணுவம் ஆக்கியது. 2005ல் நடந்த தேர்தலைப் புறக்கணித்ததும் அவர்களது மிகபெரிய தவறுகளாக சுட்டிக் காட்டப்படுகிறது. இலத்தீன் அமெரிக்க அனுபவங்களைப் பார்க்கின்றபோது ஆயுத அமைப்பின் அதிகாரத்தின் வழி ஓர் அரசியலைக்கொண்ட அல்லது ஒரு கருத்தியலைக் கொண்ட ஓர் அமைப்பு தொடர்ந்து அதிகாரத்தைக் கொண்டிருப்பதற்கான சாத்தியம் இனி எதிர்கால உலகில் இல்லை என்றும் யமுனா ராஜேந்திரன் சொல்கிறார். வன்முறை அரசியல் இனி சாத்தியம் இல்லை, இடைவிடாத மக்கள் கிளர்ச்சி அரசியல்தான் இனி சாத்தியம் என்றும் சொல்கிறது இந்தப் புத்தகம். அதே நேரத்தில் நம்மூர் கம்யூனிஸ்ட் சவால் புலிகள், கட்டுடைப்பு செய்யும் காகித மனிதர்கள், விடுதலைப் புலிகளை விமர்சனம் செய்வது என்பதன் பெயரால் அங்கு நடந்த விடுதலைப் போராட்டத்தையே கொச்சைப்படுத்துவதை இந்தப் புத்தகம் வன்மையாகக் கண்டிக்கிறது. ஈழப் பிரச்னையை மட்டுமல்ல, தமிழக இந்திய அரசியலையும் எப்படிப் பார்க்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது இந்தப் புத்தகம். -புத்தகன். நன்றி: ஜுனியர் விகடன், 9/10/13.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *