நெருக்கடி நிலையை எதிர்த்துப் போராட்டம்
நெருக்கடி நிலையை எதிர்த்துப் போராட்டம், இராம. கோபாலன், விஜயபாரதம் பதிப்பகம், சென்னை 31, பக். 296, விலை 200ரூ.
சுதந்திரம் என்பது போராடுவதற்கான உரிமையையும் உள்ளடக்கியது. நமது நாட்டின் சுதந்திரத்துக்கும் மக்களாட்சி மாண்புக்கும் 1975 ஜுன் 25இல் பெரும் நெருக்கடி ஏற்பட்டது. அந்த நெருக்கடியிலிருந்து மீண்டது எப்படி? நமது உரிமைகளை சத்தமின்றி மீட்டவர்கள் யார்? அதில் அவர்கள் அடைந்த கஷ்டங்கள் எவை? என்பதை இந்நூல் விளக்குகிறது. தனது அரசியல் எதிரிகள் பலம் பெற்று வருவதைத் தடுக்கவும், நீதிமன்றங்களின் கண்டனங்களிலிருந்து தப்பவும் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி கையாண்ட குறுக்குவழியே நெருக்கடி நிலை அறிவிப்பு. இதன் காரணமாக நாட்டின் முக்கியமான அரசியல் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். ஊடகங்கள் முடக்கப்பட்டன. ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட தேசிய இயக்கங்கள் தடைசெய்யப்பட்டன. நெருக்கடி நிலைக்கு எதிராக மக்களைத் திரட்டி தலைமறைவுப் போராட்டம் நடத்தியவர்கள், தேசிய அளவிலும் உலக அளவிலும் நெருக்கடி நிலைக்கு எதிரான கருத்தை உருவாக்குவதில் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டனர். நெருக்கடி நிலைக்கெதிரான போராட்டங்களில் பங்கு பெற்ற நூலாசிரியர் மிகுந்த பொறுப்புணர்வுடனும், அனுபவ அறிவுடனும் தொகுத்து வழங்கியுள்ள நூல் இது. இந்தப் போராட்டங்களின் காரணமாக, 1977 மார்ச் 21இல் நெருக்கடி நிலையை விலக்கிக் கொள்ள நேர்ந்தது. அதன் பிறகு நடைபெற்ற தேர்தலில், இந்திரா காந்தி தோல்வி அடைந்தார். ஜனநாயகத்துக்கெதிரான தாக்குதல்களை எதிர்த்த வரலாற்றை இளைய தலைமுறையினர் தெரிந்து கொள்ள உதவும் சிறந்த நூல். நன்றி: தினமணி, 6/10/13.
—-
சத்தியாகிரகம், மகாத்மா காந்தி, காந்திய இலக்கிய சங்கமம்.
சத்தியாக்கிரகம் என்ற வார்த்தையின் பொருள், உண்மையை உறுதியாக கடைப்பிடிப்பது. காந்தியை பொறுத்தவரை, சத்தியம் தான் அவருக்கு கடவுள். ஆகையால் தான், சத்தியாகிரகம் என்ற சொல், கடவுளிடம் ஆர்ந்த நம்பிக்கை கொண்டு அதற்காக, வாழ்க்கையை அர்ப்பணிப்போருடைய வாழ்க்கை என்று பொதுவாக பொருள்படுகிறது. நியாயத்தையும், தர்மத்தையும், நிலைநாட்டுவதற்கு சத்தியாக்கிரகத்தையே காந்தி ஆயுதமாகக் கண்டார். சத்தியாக்கிரக தத்துவத்தை பற்றி, காந்தி அவ்வப்போது எழுதி வந்த கட்டுரைகளின் தொகுப்பு. அதே பெயரில் நூலாக வெளிவந்தது. இதில் உள்ள முக்கியமான சில பகுதிகளை, அ. ராமசாமி, தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார். மொத்தம் 198 பக்கங்களுடன் நூல் வெளிவந்துள்ளது. இதை கன்னிமாரா நூலகத்தில் படித்து பயன்பெறலாம். நன்றி:தினமலர்,14/7/2013.