சர்க்கரை மனிதர்கள்
சர்க்கரை மனிதர்கள், புதிய தலைமுறை பதிப்பகம், 25ஏ, என்.பி.இன்டஸ்ட்ரியல் எஸ்டேட், ஈக்காட்டுதாங்கல், சென்னை 32, விலை 90ரூ.
எவ்வித பிரதிபலனும் எதிர்பார்க்காமல், பிறருக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்று ஆர்வத்துடன் உழைப்பவர்கள் ஒவ்வொரு ஊரிலும் ஒருசிலர் இருப்பார்கள். எல்லோருக்கும் பத்திரிகைச் செய்திகளை படித்துச் சொல்வதுடன், பிழையின்றி செய்திகளைப் படிக்கும் சிறவர்களுக்கு சாக்லெட் கொடுக்கும், பேப்பர் பெருசு, எதிர்பாராமல் பிரச்சினைகளில் சிக்குவோருக்கு வட்டி இல்லாமல் பணம் கொடுத்து உதவும் சிறுவாட்டு லட்சுமி. இப்படி பெரிய மனம் படைத்த எளிய மனிதர்களை கண்டுபிடித்து சந்தித்திருக்கிறீர்களா?என்ற தலைப்புடன் நமக்கு அறிமுகம் செய்திருக்கிறார் எம்.பி. உதயசூரியன். இப்படியும் இருக்கிறார்களா? என்ற வியப்புடன் நம்மை ஆர்வத்துடன் படிக்கச் செய்யும் நூல். நன்றி: தினத்தந்தி, அக்டோபர் 2013.
—-
ஜஸ்டிஸ் ஜெகதீசன், ராணிமைந்தன், கலைஞன் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை 17, பக். 208, விலை 200ரூ
சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதியரசனின் வாழ்க்கை வரலாற்று நூல் இது. நீதிபதி ஜெகதீசன் அவர்கள் தன் வாழ்க்கை அனுபவங்களை கூட்டாமலும் குறைக்காமலும் பாரபட்சமின்றி நம்முன் எடுத்து வைத்திருப்பதுதான் இந்நூலின் வெற்றி. போற்றுவோரையும் தூற்றுவோரையும் கருத்தில் கொள்ளாமல் நடுநிலையான கருத்துக்களை எந்தவிதமான சமரசமும் இன்றி வெளிப்படுத்தியதலால்தான் அவரால் நீதியரசராக பரிணமிக்க முடிந்திருக்கிறது. ராணி மைந்தன் காட்டும் இவை கவனத்திற்குரிய இடங்கள். வளர்ப்பு மகன் திருமணமாகட்டும், திரையுலகில் கருணாநிதியின் பொன்விழா ஆண்டாகட்டும், அவர் அளித்த உத்தரவு நீதித்துறைக்கு கௌரவம் சேர்ப்பவை. முன்னாள் தலைமை நீதிபதிகளுடன் தான் பெற்ற அனுபவங்கள்தான் தன்னை ஒரு நீதிபதியாக பணியாற்ற சாத்தியப்படுத்தியதாக கூறுவது அவையடக்கம். நீதிபதி அவர்கள் நீதிமன்றத்தில் பணியாற்றிய விதத்தை இந்நூல் வழி படிக்கும் ஒவ்வொரு நீதிபதிகளுக்கும் ஒரு நம்பிக்கை உருவாகும். பொய்வழக்குகள், சட்டத்தின் ஓட்டைகள் மூலம் முட்டுக்கட்டை போடுதல் போன்ற விஷயங்கள் இவரிடம் பலிக்காமல் போனது மற்றவர்களுக்கு நல்ல பாடம். -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 30/10/2013.