வேதமும் பண்பாடும்
வேதமும் பண்பாடும், ஸ்ரீசர்மா சாஸ்திரிகள், ஆர் மீடியா, 37/55, சிவில் ஏவியேஷன் காலனி, நங்கநல்லூர், சென்னை 61, விலை 200ரூ.
தொன்மை வாய்ந்த ஹிந்து மதத்திற்கு சனாதன தர்மம் என்றும் ஒரு பெயர் உண்டு. இதன் நெறிமுறைகள், வைதீக கர்மாக்கள் ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த ரிஷிகளால் உருவாக்கப்பட்டவை. அவற்றில் வேதங்களும், வேதாந்தங்களும் அடக்கம். அவை தனிநபர் மற்றும் உலக நலன்கள் அனைத்திற்காகவும் ஏற்படுத்தப்பட்டவை. இத்தகைய சனாதன தர்மத்தின் சிறப்பு, வைதீக நுணுக்கங்கள், ஆசார அனுஷ்டானங்கள், கலாசாரங்களைப் பற்றிய விளக்கங்களை இந்நூலாசிரியர், தமிழில் பல நூல்கள் எழுதி வெளியிட்டுள்ளார். அவற்றின் சாரமாக The Great Hindu Tradition என்று ஆங்கில நூலாகவும் வெளிவந்து பல பதிப்புகளைக் கண்டு பிரபலமடைந்தது. அந்நூலின் தமிழ்மொழி பெயர்ப்பே இந்நூல். இதில் வேதம், மஹாபாரதம், ஹோமம், உபநயனம், விவாஹம், அபரகர்மா, சிராத்தம் என்று பல விஷயங்கள் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. இதுதவிர, இன்றைய ஹிந்து தலைமுறையினருக்கு எழும் வைதீக நுணுக்கங்களைப் பற்றிய பல்வேறு சந்தேகங்களுக்கு அட அப்படியா என்ற தலைப்பின் கீழ் கேள்வி பதில் வடிவில் மிக எளிமையாக விளக்கம் அளித்துள்ளார் இந்நூலாசிரியர். அதில் பெண்கள் பூசணிக்காய் உடைக்கலாமா, அயல் நாட்டில் வசிப்பவர்கள் அங்கேயே பித்ரு காரியங்களைச் செய்யலாமா, பெண்கள் மறுமணம், தமிழில் அர்ச்சனை, வரதட்சணை வாங்கலாமா, இப்படி நூற்றுக்கணக்கான கேள்வி பதில்கள் இதில் அடக்கம். -பரக்கத். நன்றி: துக்ளக், 30/10/2013.
—-
மவுனம் பேசும் வார்த்தைகள், நீலநிலா செண்பகராஜன், கந்தகப்பூக்கள் பதிப்பகம், 120, குட்டியணஞ்சான் தெரு, சிவகாசி 626123, விலை 60ரூ.
மனதைத் தொடும் கருத்தாழம் கொண்ட கவிதைகள் கொண்ட புத்தகம். சில கவிதைகள் பெரியவை. சில கவிதைகள் நாலைந்து வரிகள் மட்டுமே கொண்டவை. கவிதையின் வடிவம் எப்படி இருந்தாலும், எல்லாமே சிந்தனைக்கு விருந்தளிப்பவை.
—-
தென்றலும் பாப்பாவும், சிறுவர் பதிப்பகம், 21-667, வ.உ.சி. நகர், தண்டையார் பேட்டை, சென்னை 81, விலை 100ரூ.
இளஞ்சிறார்களை நல்வழியில் அழைத்துச் செல்லும் கருத்தான பாடல்களின் தொகுப்பு நூல். சிறந்த சிந்தனை, உயர்ந்த ஒழுக்க நெறி, தமிழை எளிய முறையில் ஆளும் திறன் கொண்டு குழந்தைகள் எளிய நடையில் பாடல்களைப் பாடுகின்ற வகையில் எழுதியுள்ளார் நூலாசிரியர் குப்பல்நத்தம் சே. குருசாமி. பாடல்கள் மூலம் குறில், நெடில் போன்ற இலக்கணத்தையும் புரிய வைக்கிறார். சிறுவர்களுக்கான அறிவு விருந்து அளிக்கும் நூல். நன்றி: தினத்தந்தி, அக்டோபர் 2013.