ஆழ்வார்களும் இந்திய வைணவ இலக்கியங்களும்
ஆழ்வார்களும் இந்திய வைணவ இலக்கியங்களும், கே.ஆர். விட்டல்தாஸ், பழனியப்பா பிரதர்ஸ், பீட்டர்ஸ் சாலை, சென்னை 14, பக். 838, விலை 450ரூ.
ஆழ்வார்களும் இந்திய வைணவ இலக்கியங்களும் என்ற இந்நூல் ஆராய்ச்சி நூல் மட்டுமல்ல, நல்ல தொகுப்பு நூலாகவும் திகழ்கிறது. ஆழ்வார்கள் பரம்பொருள் மேல் பக்தியும் நம் போன்ற மானிடர்கள் மீது கருணையும் கொண்டு பரத்துவத்தைப் பல்வேறு பாடல்களால் உணர்த்தி பக்தி எப்படி இருக்க வேண்டும் என்று பாடி வாழ்ந்தும் காட்டியிருக்கிறார்கள். ஆழ்வார்களின் தமிழ்ப் பாசுரங்களையும் பக்தி நூல்களையும் மொழி வேறுபாடு இல்லாது மலையாளம், தெலுங்கு, கன்னடம், வங்காளி, ஹிந்தி, மராட்டி, குஜராத்தி, சௌராஷ்டிரம் ஆகிய தாய்மொழிகளைக் கொண்ட கவிஞர்களும் படித்து அவற்றின் கருத்து, சொல்லழகு, அமைப்பு ஆகியவற்றால் கவரப்பட்டு அவற்றை அப்படியே உள்வாங்கி தத்தமது மொழிகளில் பாடியிருக்கின்றனர் என்பது பெருமை தரும் செய்தி. தமிழ் நாட்டில் வசிக்கும் சௌராஷ்டிர்கள் தமிழ் இலக்கியங்களில் தேர்ந்து ஆழ்வார்களின் பாசுரங்களைத் தம்முடைய மொழியில் தேவநாகரி லிபியில் பாடல்களாகவும் காப்பியங்களாகவும் எழுதியிருப்பதை அரிய பல சான்றுகளுடன் நூலாசிரியர் எழுதியிருக்கிறார். ஆழ்வார்கள் மட்டுமின்றி மகான் தியாகராஜ ஸ்வாமிகள், நடன கோபால நாயகி ஸ்வாமிகள், கிருஷ்ண தேவராயர், அன்னமாசார்யா, தெனாலி ராமன் போன்றோரின் புலமையையும் அவர்களுடைய வாழ்க்கையின் முக்கிய சம்பவங்களையும் அற்புதமாக நூல் விவரிக்கிறது. பக்தி இலக்கியம், தமிழ் இலக்கியம் ஆகிய இரண்டின் வரலாறும் ஆற்றின் இருகரைகளாக நூல் முழுக்க விரவியிருக்கிறது. எல்லா பள்ளி, கல்லூரிகளிலும், வாசகர் வட்டங்களிலும் அவசியம் வாங்கப்பட வேண்டிய அரிய நூல். நன்றி: தினமணி, 5/8/2013