தனிநாயக அடிகளாரின் படைப்புகள்
தனிநாயக அடிகளாரின் படைப்புகள், பூம்புகார் பதிப்பகம், பக். 397, விலை 200ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0002-143-6.html
இலங்கை யாழ்ப்பாணத்தில் கரம்பொன் என்ற ஊரில் பிறந்த சேவியர் தனிநாயகம் அடிகளார் எழுதிய புத்தகங்கள், கட்டுரைகள் மற்றும் ஆற்றிய சொற்பொழிவுகளின் தொகுப்பு இந்நூல். தனிநாயகம் அடிகளாரின் தமிழ்ப்பணியை மீண்டும் ஒரு முறை நினைவு கூரும் வகையில் உள்ளது. இந்த நூலின் முதல் பிரிவான ஒன்றே உலகம் பகுதியில், தான் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அமெரிக்கா, சோவியத் ரஷ்யா, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, கம்போடியா, இந்தோனேசியா ஆகிய 21 நாடுகளின் பயணக் குறிப்புகளைத் தீட்டியுள்ளார். இரண்டாவது பிரிவில், திருவள்ளுவரையும், திருக்குறளையும், கிரேக்க ஒழுக்க இயலுடனும், ரோமானிய ஒழுக்க இயலுடனும், புத்தரின் ஒழுக்க இயலுடனும் ஒப்பீட்டு நோக்கில் அவர் ஆற்றிய சொற்பொழிவுகள், ஆய்வு மாணவர்களுக்கு புதிய வெளிச்சத்தை காட்டக் கூடியன. மூன்றாவது பிரிவான சங்க காலத்தில் விரிவாகும் ஆளுமையின் இயல்பு பகுதியில், பிறர் நலக் கொள்கைகள் குறித்து தமிழ் இலக்கியங்கள் கூறும் கருத்துகளை அடிகளார் ஆதாரப் பூர்வமாக எடுத்துரைக்கிறார். நான்காவது பிரிவான தமிழர் பண்பாடும் அதன் சிறப்பு இயல்புகளும் என்ற பகுதியில், தமிழர் பண்பாடு சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்டது எனக் கூறும் அடிகளார், அதை கிரேக்க, ரோமானிய போன்ற பண்பாடுகளுடன் ஒப்பிட முடியாது என்கிறார். ஐந்தாவது பிரிவு கட்டுரைக் கொத்து. இதில் 8 தலைப்புகளில் இடம் பெற்றுள்ள கட்டுரைகளில், உலக மக்களின் வாழ்க்கை, கலை, தமிழ் மொழிக்கும், கலாச்சாரத்திற்கும் இடையிலான தொடர்பை அடிகளார் விளக்கியுள்ளார். இதனை அரிய கருத்துப் பெட்டகமான இந்த நூலை படிப்பதே அடிகளாருக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்கும். நன்றி: தினமணி, 25/11/13.