நோய்மனம்
நோய்மனம், கோவி. பால. முருகு, தமிழ்வேந்தன் பதிப்பகம், வடலூர் 607303, பக். 112, விலை 70ரூ.
கண்ணில் பட்டு கருத்தில் பதிந்து மனதைவிட்டு அகலாத கருத்தை ஏற்படுத்துபவையே சிறந்த சிறுகதைகள் என்பர் இலக்கிய ஆர்வலர். நூலாசிரியர் நல்ல சிறுகதைகளைப் படைக்க முயற்சித்திருப்பது தெரிகிறது. ஆனால், அதே சமயம், கருத்துத் திணிப்பின் களமாக சிறுகதையை அவர் பயன்படுத்துகிறாரோ என்ற எண்ணத்தை படிப்போர் மனதில் ஏற்படுத்துவதையும் தவிர்க்க முடியவில்லை. திருப்பம் என்ற முதல் சிறுகதையில் தொடங்கி வேட்கை வரையில் கதையை அவசர அவசரமாகக் கூறுவதுபோல இருக்கிறது. கதையைப் படிப்போர் இது இப்படி முடியுமோ என்று பெரிய எதிர்ப்பார்ப்போடு படித்துச் சென்றால், காற்றுப்போன பலூனைப்போல எவ்வித அதிர்வையும் ஏற்படுத்தாமலேயே கதை முடிவதை அடுத்த தொகுதியிலாவது நூலாசிரியர் தவிர்க்க வேண்டும். ஆனாலும் மனநாட்டியம் போன்ற சில சிறுகதைகளும் நடுத்தர வர்க்கத்தின் மனத்தை அப்படியே வெளிப்படுத்துவதாக இருக்கின்றன. கதைகள் அனைத்துமே இன்றைய யார்த்த வாழ்க்கையைப் படம் பிடித்து விளக்கவதாக உள்ளதைப் பாராட்டலாம். நன்றி: தினமணி, 30/9/13.
—-
சூபி ஞானம், சி.எஸ். தேவநாதன், நேஷனல் பப்ளிஷர்ஸ், பக். 128, விலை 70ரூ.
கி.பி. 700 முதல், அரேபியாவில் துவங்கி, மத்திய ஆசிய நாடுகளில் செழித்து வளர்ந்த, தத்துவம் சூபி. ஸபா என்ற அரபுச்சொல்லின் அர்த்தம் பக்தி, தூய்மை. அதில் இருந்து வந்ததுதான் சூபி. சூபி என்றால் என்ன? சூபி குரு எப்படிப்பட்டவர்? சூபி கொள்கை என்ன? ஆகியவற்றை விரிவாக விளக்கும் ஆசிரியர், ரூமி, கபிர்தாசர், குணங்குடி மஸ்தான், தக்கலை பீரப்பா ஆகியோரைப் பற்றியும் விளக்கி உள்ளார். சூபி ஞானத்தை பற்றிய எளிய அறிமுகம் என, இந்த நூலை கூறலாம். -விகிர்தன் நன்றி: தினமலர் 17/11/13.