அழகைத் தேடி
அழகைத் தேடி, ஜோதிர்லதா கிரிஜா, சேது அலமி பிரசுரம், 8, மாசிலாமணி தெரு, பாண்டிபஜார், தியாகராய நகர், சென்னை 17, பக். 224, விலை 125ரூ.
பெண்கள் காதல் என்னும் பெயரால் எப்படியெல்லாம் வஞ்சிக்கப்படுகின்றனர் என்பதை நாளிதழ்களில் நாம் அன்றாடம் காணும் செய்திகள் எடுத்துரைக்கின்றன. இக்கருவை மையமாக வைத்து எழுத்துலகில் தனிச்சிறப்பிடம் பெற்றுள்ள ஜோதிர்லதா கிரிஜா இச்சமூகப் புதினத்தை எழுதியுள்ளார். சூர்யா என்கிற இளம்பெண் முன்பே திருமணமான ஒருவன் சாமர்த்தியமாக அதை மறைத்துக் கூறும் பொய்யை நம்பி, எப்படிக் காதல் வலையில் விழுந்து ஏமாந்து போகிறாள் என்பதை படு யதார்த்தமாகவும், இயல்பான சம்பவப் போக்குகளுடனும் புதினம் மனம் நெகிழத்தக்க வகையில் விவரிக்கிறது. -கவுதம நீலாம்பரன்.
—-
சிந்தாமணி நிகண்டு, வ. ஜெயதேவன், ரா. பன்னிருகை வடிவேலன், நோக்கு, 259, நேரு நகர், 2வது முதன்மைச் சாலை, சென்னை 600096, பக். 157, விலை 100ரூ.
அகராதியில் ஒரு சொல்லுக்கு ஒரு பொருள் உண்டு. ஆனால் நிகண்டு தொடர்புடைய சொல்லுக்கு பல பொருள்களை வரிசையாக கூறும் தமிழில், செய்யுள் வடிவில் பல நிகண்டுகள் வெளிவந்துள்ளன. மொழி வளம் சேர்க்கும் நிகண்டு வரிசையில், 170 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த யாழ்ப்பாணம், வல்வை, ச. வயித்திய லிங்கரின் சிந்தாமணி நிகண்டு பழமையும், பெருமையும் மிக்கது. 137 ஆண்டுகளுக்கு பின், இந்த நூல் மறுபிறவி எடுத்து மலர்ந்துள்ளது, தமிழ் மொழி செய்த தவப்பயனாகும். 386 செய்யுள்கள் மூலம் 3088 தமிழ்ச் சொற்களுக்கு அகராதிப் பொருள் தருகிறது. இந்த சிந்தாமணி நிகண்டு. 400 ஆண்டுகளுக்கு முன், மண்டலபுருடர் இயற்றிய சூடாமணி நிகண்டினைப் போல், இந்த சிந்தாமணி நிகண்டும், ககர எதுகை முதல் னகர எதுகை வரை சொற்களுக்கு, விளக்கம் தருகிறது. ஒரு அடிக்கு இரு சொல் வீதம், ஒரு பாட்டில் 8 சொற்கள் விளக்கம் பெற்றுள்ளன. சில எடுத்துக்காட்டுகள்- வம்பல்-திசை, வாம வர்த்தம், இடம்புரிச் சங்கு, விம்பு-கழுகு, வேம்பின் தாரோன்-பாண்டியன், அம்புலி-சந்திரன், அமிச்சை-ஞானம், சிம்புள்-என்கால்புள், சிம்மதம்-பாம்பு (பாடல் 212). இறுதியில் அகராதிச் சொற்பட்டியல் பொருளுடன் தரப்பட்டுள்ளது. படிப்பவருக்கு மிகுபயன் தரும். அகராதிபடித்தவன் அறிஞன், வாதாடுவதில் வல்லவன், எதையும் எளிதில் ஏற்கமாட்டான். அதனால்தான், அகராதி படித்தவன் என்று பாராட்டாமல் அகராதி பிடித்தவன் என்று ஆணவக்காரனாய் அவனைக் கண்டு ஒதுங்க ஆரம்பித்தனர். சிந்தாமணி நிகண்டு கேட்டது எல்லாம் தரும் தமிழ் அகராதி. -முனைவர் மா.கி. ரமணன். நன்றி; தினமலர், 22/12/13.