திரை
திரை, எஸ்.எல். பைரப்பா, விஜய பாரதம் பதிப்பகம், 12, எம்.வி. நாயுடு தெரு, சேத்துப்பட்டு, சென்னை 31, பக். 470, விலை 250ரூ.
புகழ்பெற்ற கன்னட எழுத்தாளரான இந்நூலாசிரியரின் படைப்பு ஆவரணா இந்த நாவல் வெளியாகி 5 வருடத்திற்குள் 30 பதிப்புகளைப் பெற்று, கன்னட வாசகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நாவல் மராட்டி, ஹிந்தி, சமஸ்கிருதத்திலும், தற்போது திரை என்ற பெயரில் தமிழிலும் சிறப்பாக மொழி பெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளது. ஆவரணா என்பதற்கு திரை என்ற பொருளும் உண்டு. அதையே தமிழில் இந்நாவலுக்குத் தலைப்பாக வைத்துள்ளனர். இக்கதையின் நாயகனும், நாயகியும் சினிமா தொழில் சார்ந்தவர்கள். அறிவுஜீவிகள். நாயகன் அமீர் முஸ்லிம். நாயகி ரஸியா ஹிந்து. இருவருமே தங்கள் மதத்தின் மீது பற்று கொண்டவர்கள். காதல் வேட்கையில் லஷ்மி தனது தகப்பனாரின் எதிர்ப்பையும் மீறி ரஸியா என்று பெயர் மாற்றி, மதம் மாறி, அமீரை மணம் புரிகிறாள். அதற்குப் பின் அவர்களது வாழ்க்கையின் ஒவ்வொரு விஷயத்திலும் ஏற்படும் முரண்பாடுகள், மனக்கஷ்டங்கள் தத்ரூபமாக அலசப்படுகின்றன. குறிப்பாக இவரின் மதச் சடங்குகிளல் உள்ள நிறை குறைகள் இந்த இரு கதாபாத்திரங்களின் மூலமே விவாதிக்கப்படுகின்றன. இவர்கள் இந்திய வரலாற்று ஆவணப் படம் ஒன்றை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதால், இந்திய சரித்திரத்தை ஆய்வு செய்யும்போது, அதில் வரும் வரலாற்று பிழைகளும் இவர்களால் புள்ளி விவரங்களோடு விவாதிக்கப்படுகின்றன. இந்த நாவல், மதம் மாறி மணம் புரிவதால் ஏற்படும் கஷ்ட நஷ்டங்களை மட்டுமின்றி,இந்திய சரித்திரத்தின் உண்மைகளை ஜாதி மத வேறுபாடின்றி அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறது. -பரக்கத். நன்றி; துக்ளக், 18/12/13
—-
ஆயுளை அதிகரிக்கும் அதிசய உணவு முறைகள், கே.எஸ்.சுப்ரமணி, புதிய புத்தக உலகம், 52சி, வடக்கு உஸ்மான் சாலை, தி.நகர், சென்னை 17, பக். 312, விலை ரூ.120.
அதிக ஆயுளுடன் வாழ, நம் உடலில் ஹோமோசிஸ்டைன் என்ற பொருளும், கார்டிஸோல் என்ற ஹார்மோனும் அளவுக்கு அதிகமாக சேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு செரோட்டனின் என்ற பொருள் நம் உடலில் நன்கு சுரக்க வேண்டும் என்று மருத்துவ உலகம் கூறுகிறது. அதை அடிப்படையாகக் கொண்டு இந்நூலாசிரியர், நீடித்த ஆயுளையும் நிறைந்த ஆரோக்கியத்தையும் பெற எத்தகைய உணவு முறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்பதை இந்நூலில் விளக்கியுள்ளார். 300 பக்கங்களுக்கு மேல் விரியும் இந்நூலை ஆறு பகுதிகளாகப் பிரித்து, முதல் பகுதியில் என்ன வகையான உணவுகள் ஆயுளை அதிகரிக்கும் என்ற விவரங்களை சுமார் 13 கட்டுரைகளில் விளக்குகிறார். இரண்டாவது பகுதியில் இயற்கை உணவுப் பொருட்களில் உள்ள மருத்துவக் குணங்களையும் 3வது பகுதியில் பானங்களில் உள்ள மருத்துவக் குணங்களையும் 4வது பகுதியில் எப்போதும் இளமைத் துடிப்புடன் வாழ்வதற்கான வழிமுறைகளையும் 5வது பகுதியில் நம் உடலில் உள்ள நோய்களைக் குணமாக்கவும், 6ஆவது பகுதியில் நோய் வராமல் பாதுகாப்புடன் வாழ்வதற்கான ஆலோசனைகளையும் விளக்குகிறார். தவிர, உலகெங்கும் பிரசுரிக்கப்படும் மருத்துவ ஆரோக்கியத்துடன் வாழ்வதற்கு வேண்டிய குறிப்புகளையும் இடையிடையே குறிப்பிட்டுள்ளது வாசகர்களுக்கு நல்ல பயனைத் தரவல்லது. -பரக்கத். நன்றி: துக்ளக், 11/12/13.