வண்டாடப் பூ மலர

வண்டாடப் பூ மலர, ம.பெ. சீனிவாசன், கவிதா பப்ளிகேஷன்ஸ், சென்னை 17, பக். 208, விலை 125ரூ.

வண்டாடப் பூ மலர என்ற நூலின் தலைப்பே மிகவும் இலக்கிய நயமாகவும், உச்சரிக்கும்போது இனிமையாகவும் இருப்பதை உணர முடிகிறது. அதைப்போலவே நூலில் இடம் பெற்ற ஒவ்வொரு கட்டுரையும் இலக்கிய ஆய்வு நோக்கில் எழுதப்பட்டிருப்பது, மிகச் சிறப்பானதாக உள்ளது. சாமானியர்களின் வாய்மொழிப்பாடல்கள் எப்படி சங்க இலக்கியவாதிகளிடம் தாக்கத்தை ஏற்படுத்தின என்பதை முதல் கட்டுரையின் மூலம் ஆசிரியர் மிக நுணுக்கமாக, ஆதாரங்களோடு விளக்கியிருப்பது, அவரது நுட்பமான அறிவை வெளிப்படுத்துகிறது. நூலின் இரண்டாவது கட்டுரையான ஐம்பாலில், அதன் பெயர்க் காரணத்தை அழகாக ஆய்ந்துள்ளார். முடியைப் பற்றியதாலோ என்னவோ, ஆசிரியருக்கும் முடிவில்லாமல் இந்த ஆய்வைத் தொடர வேண்டும் என்று கூறியிருக்கிறார். நம் வாழ்வில் சாதாரணமாகக் கூறப்படும் பல சிறப்புத் தொடர்களை யார் கூறியது என்றே தெரியாமலே பயன்படுத்தி வருகிறோம். அந்தவகையில் நிலம்+நீர் = உணவு எனும் கட்டுரையானது உண்டி கொடுத்தார் உயிர் கொடுத்தோர் எனும் சொல்லின் பெருமையை விளக்குவதாக உள்ளது. தமிழின் ஆதிகவிகளில் ஒருவரான புறநானூற்றுப் புலவர் குட புலவியனார் கூறிய அந்தச் சொற்றொடர் எப்படி மணிமேகலை காலம் தொட்டு, இன்று வரை வழக்கத்தில் உள்ளது என்பதை மிக நேர்த்தியாகக் கூறியிருப்பது படிப்போரை சிந்திக்க வைக்கிறது. நூலின் ஒவ்வொரு பக்கத்தையும் படிக்கும்போது புதிய புதிய விஷயங்களை அறியும் வாய்ப்பும், ஆய்வு நோக்கில் ஆசிரியர் பாடல்களை விளக்கும்போது வியப்பும் ஏற்படுகிறது. ஆகவே, படித்தவர் முதல் பாமரர் வரையில் நமது தமிழர்தம் வாழ்வை அறிந்து எதிர்காலத்தில் நமது பண்பாட்டைப் பாதுகாக்க இதுபோன்ற நூல்கள் ஏராளமாக வருவது அவசியம். அந்தவகையில் இந்த நூல் தமிழ் அறிந்த அனைவரது கையிலும் தவழ வேண்டிய நூல் என்பதில் சந்தேகமேயில்லை. நன்றி: தினமணி, 18/11/13.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *