பகை தகர்க்கும் தமிழ்த் தேசியம்
பகை தகர்க்கும் தமிழ்த் தேசியம், வீர சந்தானம், பொன்னி வெளியீடு, 21/1758, சாரதி நகர், என்ஃபீல்டு அவென்யூ, மடிப்பாக்கம், சென்னை 91, விலை 40ரூ.
தூரிகைப் போராளி வீர. சந்தானம் எழுதிய புத்தகம் இது. ஒரு காலத்தில் இந்திய தேசியத்துக்கும் திராவிட தேசியத்துக்கும் தீராத கருத்து மோதல் இருந்து வந்தது. இப்போது திராவிட தேசியத்துக்கும் தமிழ்த் தேசியத்துக்குமான மோதலாக அது மாறி இருக்கிறது. இதில் தமிழ்த் தேசியத்தின் பக்கமாக ஓவியர் வீர.சந்தானம் தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறார். தமிழ்த் தேசியம் பேசுவதாலேய திராவிட இயக்கத்தின் சாதனைகளை, திராவிடத் தலைவர்களைக் கொச்சைப்படுத்த வேண்டும் என்ற வறட்டுப் பிடிவாதம் இல்லாமல் அந்த இயக்கத்திடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டியவை என்ன? அவர்களின் கடந்த காலத் தவறுகளில் இருந்து படித்தாக வேண்டிய பாடங்கள் என்ன என்பதை உள்ளார்ந்த ஈடுபாட்டுடன் வீர. சந்தானம் அடுக்குகிறார். இந்தப் புத்தகத்தின் வெற்றியே அவரின் எளிமையான மொழி நடைதான். பொதுவாக கொள்கை, தத்துவம் சார்ந்த விவாதப் புத்தகங்கள், அதைத் தெளிவுபடுத்துவதாக நினைத்து அதிகமான குழப்பங்களையே ஏற்படுத்தும். மண்மொழி இதழில் சாமானியர்களுக்கான தமிழ்த் தேசியம் என்ற தலைப்பில் அவர் கேள்வி பதில் வடிவில் எழுதியவை இவை என்பதால் உண்மையில் சாமானியர்களுக்காக எழுதப்பட்டதாகவே இருக்கிறது. இந்தியா என்பது பல்வேறு தேசிய இனத்தவர் வாழுகிற ஒரு நாடு. மொழியால், இனத்தால் பிரிவுபட்டு பக்கத்துப் பக்கத்து நிலப்பரப்பில் வாழ்ந்துகொண்டு இந்தப் பகுதி மக்களை தன்னுடைய நிர்வாக வசதிக்காக இந்தியா என்ற நாடாக உருவாக்கியது பிரிட்டிஷ் நிர்வாகம். ஒவ்வொரு சொல்லுக்கும் பொருளுக்கும் இலக்கணம் இருப்பதுபோல் தேசத்துக்கும் இலக்கணம் உள்ளது. பொதுமொழி, பொது தாயகம், பொதுவான பொருளார வாழ்க்கை, பொதுவான உளவியல் உருவாக்கம் இவை அனைத்தையும் கொண்டதுதான் தேசம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். இது இந்தியாவுக்குப் பொருந்தி வரவில்லை என்று தொடங்கும் வீர.சந்தானம் திராவிடம் என்பதையும் தேசியமாக ஏற்கவில்லை. ஆனால் திராவிடம் என்ற சொல் என்ன நோக்கத்துக்காகப் பயன்படுத்தப்பட்டது என்பதை மிகச் சரியாகவே வீர. சந்தானம் அடையாளப்படுத்துகிறார். ஆயிரம் ஆண்டுகள் கல்வி மறுத்த, மனிதனை மனிதனாக ஏற்று மறுத்த ஆரியர்களிடம் இருந்து நம்மைத் தனியாக அடையாளப்படுத்த அநத் ஆரியத்தை எதிர்க்க அதற்கு மாற்றாக தந்தை பெரியார் திராவிடர் என்ற சொல்லைப் பயன்படுத்தினாரே தவிர அவர் சிந்தனை முழுவதும், தமிழர், தமிழர் நலன் சார்ந்தே இருந்தது. அவர் திராவிட நாடு என்றாலும் சென்னை மாகாணம் என்றாலும் அதன் சாரம் தமிழ்நாடே தமிழ்த் தேசமே என்று சொல்வது கவினக்கத்தக்கது. திராவிடம் என்ற சொல்லைப் பயன்படுத்துவதாலேயே தீண்டத்தகாதவர்களாக அவர்களை நினைப்பவர்களுக்கு இது புரிய வேண்டும். ஒரு இனம் தம் மொழி, வாழ்விடம், வாழ்வு, பண்பாடு பறிபோகிறபோது அதை மீட்டெடுக்கப் போராட்டம் நடத்துவது தவிர்க்க முடியாதது. அந்தப் போராட்டம் எத்தகைய புரிதலுடன் நடத்தப்பட வேண்டும் என்பதற்கான பாடப் புத்தகமாக இருக்கிறது இந்தப் புத்தகம். -புத்தகன். நன்றி: ஜுனியர் விகடன், 24/11/13.