சிக்கலில் இந்திய விவசாயிகள்
சிக்கலில் இந்திய விவசாயிகள், பத்து வேளாண்மைப் பொருளாதாரக் கட்டுரைகள், அ. நாராயணமூர்த்தி, பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை 14, பக். 81, விலை 50ரூ.
விவசாயிகளின் இன்றைய அவல நிலைக்கான காரணங்களை ஆராயும் கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். விவசாயத்தின் பின்னடைவுக்குக் காரணம், அரசாங்கத்தின் தவறான பல்வேறு கொள்கைகளே என்பதை ஆதாரப்பூர்வமாக நிறுவும் நூல். உரம், பூச்சிக்கொல்லி மருந்துகள், விதைகள் போன்ற விவசாயிகளுக்குத் தேவையான இடுபொருள்களின் விலைகளை அரசு கட்டுப்படுத்துவதில்லை. அதே சமயம் உற்பத்தி செய்த பொருள்களின் விலையை விவசாயி நிர்ணயிக்க முடிவதில்லை. இதனால் விவசாயி இழப்புகளைச் சந்திக்க நேர்கிறது. விவசாயி பாசனத்துக்குப் பயன்படுத்துகிற நீரை, தொழிற்சாலைகளுக்கும், நகரங்களும் குடி நீருக்காகவும் பயன்படுத்த அரசு அனுமதி அளிப்பது விவசாயிக்கு இழப்பு ஏற்பட இன்னொரு காரணம். சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதித்தால் அந்நிய நிறுவனங்கள் தமக்குத் தேவையான பொருள்களை மட்டுமே விவசாயி உற்பத்தி செய்யச் சொல்லும். தொடர்ந்து ஒரே மாதிரியான பொருள்களை உற்பத்தி செய்வதால் நிலவளம் குறைந்துவிடும். அதிக அளவில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்து, பாதுகாத்து, அதிக விலைக்கு விற்று அந்நிய நிறுவனங்கள் சம்பாதித்துக் கொள்ளும். அதே சமயம், விவசாயிகளின் விளைபொருள்களுக்கு நியாயமான விலை கிடைக்காமல் போகும் என இவை போன்ற இந்திய விவசாயம் சந்திக்கும் இன்றையப் பிரச்னைகளை இந்நூல் மிகவும் நுட்பமாகவும் ஆழமாகவும் விரிவாகவும் ஆராய்கிறது. நன்றி: தினமணி, 30/12/2013.
—-
கடைசிக்கோடு, ரமணன், கவிதா பப்ளிகேஷன், 8, மாசிலாமணி தெரு, பாண்டிபஜார், தி.நகர், சென்னை 17, விலை 80ரூ.
இந்தியாவின் வரைபடம் முதன் முதலாக 1806ம் ஆண்டு எவ்வாறு தயாரிக்கப்பட்டது? அதன் மூலம் இமயத்தின் உயரமான சிகரம் எவரெஸ்ட் என்பது எப்படி கண்டறியப்பட்டது? என்பது போன்ற பல தகவல்கள் நாவல் போல சுவைபட தரப்பட்டுள்ளன. நன்றி: தினத்தந்தி, 2/1/2014