தடம் பதித்த மாமனிதன் ரசிகமணி டி.கே.சி.
தடம் பதித்த மாமனிதன் ரசிகமணி டி.கே.சி., தி. சுபாஷிணி, மித்ரஸ் பதிப்பகம், ஸ்ரீனிவாசன் என்க்ளேவ்,10/18, வாசன் தெரு, தி.நகர், சென்னை 600017, பக். 400, விலை 250ரூ.
ராமன் கம்பனுக்குள் வந்தார், கம்பன் டி.கே.சி.க்குள் வந்தார் என்றும், தமிழ் உரைநடை உயிரோட்டமுள்ளதாயும், உணர்ச்சியை வெளிப்படுத்துவதுமாக அமைவதற்கு டி.கே.சி. தான் வழிகாட்டி என்று, மூதறிஞர் ராஜாஜியால் பாராட்டப்பெற்றவர். என்னருமை நண்பா, இனிய கலை ரசிகா, தென்னர் தமிழ் வளர்க்கும் தேசிகா, என்றெல்லாம் நாமக்கல் கவிஞரால் பாராட்டப் பெற்றவர். குற்றாலம் என்றாலே, ரசிகமணியும் அவர் கண்ட வட்டத் தொட்டியும்தான் இலக்கிய ஆர்வலர்களுக்கு நினைவுக்கு வரும். தமிழ் வளர்த்த வழக்கறிஞரான டி.கே.சி.யின் வரலாற்றை ஒரு பகுதியாகவும் டி.கே.சியின் கண்ட கவி உருவம், டி.கே.சியின் பன்முகங்கள், டி.கே.சி.யும் சான்றோர்களும், டி.கே.சியும் நினைவுத் தடங்கள், டி.கே.சி.யின் கடிதங்கள், டி.கே.சி.யின் ஆனந்த அலைகளில் இப்படி பல தலைப்புகளில் கட்டுரைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. முறையாக பொருளடக்கம் தந்து, தலைப்புகளுக்கு ஏற்ப மாற்றியமைத்து வரிசைப்படுத்தியிருந்தால், நூல் இன்னும் செம்மையாக ஒரு கோவையாக அமைந்திருக்கும். ரசிகமணி டி.கே.சி.யைப் பற்றி அறிந்து கொள்ள, இந்நூல் பயன்படும். -பின்னலூரான்.
—-
சித்தர்களின் ஜீவ சமாதி ரகசியங்கள், கைலாசநாதன், ஸ்ரீ ஆனந்த நிலையம், 7/14, புகார் முதல் தெரு, அசோக் நகர், சென்னை 600083, பக். 528, விலை 450ரூ.
தன்னைத்தானே அறிதல் இறைத்தன்மை உணர்தல். தான் வேறு இறை வேறு என்ற நிலை அறிந்து, இரண்டுக்கும் ஒன்றாமே பரிபூரண நிலையே எல்லா மனிதர்களும் அடைந்து ஆனந்தம் பெற வேண்டும் என்பதே, சித்தர் நெறிகள் உணர்த்தும் இறைக்கொள்கை. இதற்கான அடயோகம், லயயோகம், குண்டலினி யோகம் போன்ற வழிமுறைகளை ஆசிரியர் விளக்குகிறார். பக்தி இலக்கியப் பொக்கிஷம். -எஸ். கே. குரு. நன்றி: தினமலர், 5/1/14.