என்மகஜெ
என்மகஜெ, அம்பிகாசுதன் மாங்காடு, தமிழில் சிற்பி, கவிதா பப்ளிகேஷன்ஸ், சென்னை 17, பக். 288, விலை 200ரூ.
கேரள மாநிலத்தின் வட கோடியில் உள்ள ஊரான என்மகஜெ, அரசு சுயநல அரசியல்வாதிகள், கார்ப்பரேட் கலாசாரம், விலைபோகும் விஞ்ஞானிகளின் கூட்டுச்சதி, முதலாளித்துவத்தின் சந்தைமயமாக்கல் வெறி போன்றவற்றுக்கு இலக்காகி, எப்படி உயிரினங்கள் அற்றப் போகும் அவலநிலைக்கு உள்ளானது என்பதை விளக்கும் நாவல் இது. முந்திரிக் காடுகளின் பெயரில் வனங்கள் அழிக்கப்படுதல், பின்னர் முந்திரி மரங்களை தேயிலைக் கொசுக்களிடமிருந்து காப்பதாகக்கூறி பல நாடுகளில் தடை செய்யப்பட்ட எண்டோசல்பான் என்னும் பூச்சிமருந்தைத் தெளித்தல், இதனால் பாழ்படும் இயற்கையின் அவலம் போன்றவை நம் இதயத்தைப் பதைபதைக்க வைக்கிறது. எண்டோசல்பானின் பாதிப்பால், நினைத்துப் பார்க்கவே முடியாத விதவிதமான விநோத நோய்களுடன் பிறந்து, வளர்ச்சியின்றி குறுகிப்போய், படுக்கையிலேயே கிடக்கும் குழந்தைகளின் அவலம் நமக்குள் அதிர்வை ஏற்படுத்துகிறது. உண்மையில் ஹிரோஷிமாக்களும் நாகசாகிகளும் இப்போதும் இந்தியாவில்தான நிகழ்ந்துவருகின்றன. மிகவும் அமைதியாக என கதாபாத்திரம் ஒன்று பேசுவதாக உள்ள வரி நெற்றிப்பொட்டில் அறைகிறது. சுற்றுச்சுழலைப் போற்றிப் பாதுகாப்பதன் தேவையை உணர்வுப்பூர்வமாகச் சொல்கிறது இந்நாவல். மொழிபெயர்ப்பு என்பதே தெரியாமல் நாம் நாவலுடன் ஒன்றிப் போவதை இங்கே குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். நன்றி: தினமணி, 20/1/2014.
—-
108 சித்தர்கள் வாழ்வும் வாக்கும், முத்து சுந்தரி பிரசுரம், பி 18, அரவிந்த் நரேன் என்கிளேவ், 8, மாசிலாமணி தெரு, பாண்டிபஜார், தி.நகர், சென்னை 17, விலை 200ரூ.
அகத்தியர், திருமூலர், கொங்கணர், பாம்பாட்டிச் சித்தர், குதம்பைச் சித்தர் உள்பட 108 சித்தர்களின் வரலாற்றையும், அவர்களின் சிறப்புகளையும் அழகிய நடையில் அருமையாக எழுதியுள்ளார் ஜெகாதா. சித்தர்கள் பற்றி அறிய மிகச்சிறந்த புத்தகம். நன்றி: தினத்தந்தி, 12/2/2014.