நீரோட்டம் பார்ப்பது எப்படி
நீரோட்டம் பார்ப்பது எப்படி?, மு.லக்ஷ்மி, வானதி பதிப்பகம், 13, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 17, விலை 80ரூ.
கிராமப்புறங்களில் பெரியவர் ஒருவர், இளம் புளியங்க வட்டையைக் கொண்டு, நிலத்துக்கடியில் நீரோட்டம் இருப்பதை கண்டறிந்து கூறும் வித்தையைக் கேள்விப்பட்டிருக்கிறோம். அந்த மரபு வழியைச் சார்ந்த ஒரு பெண்டுலம் மூலம் நீரோட்டம் பார்ப்பது எப்படி என்ற ஆய்வு மற்றும் செய்முறை நூலை, வட்டாட்சியராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற இந்நூலாசிரியர் இயற்றியுள்ளார். இவர் தனது பணி ஓய்வுக்குப் பின், பல வருடங்கள், இது குறித்த ஆய்வுகளில் ஈடுபட்டு, எந்த இடத்தில் எத்தனை அடி ஆழத்தில், எவ்வளவு காலன் நீர் உள்ளது என்பதையும் அறியும் தொழில்நுட்பத்தைக் கண்டறிந்தார். அதன் பலனாக தமிழகத்தின் பல பகுதிகளில் நூற்றுக்கணக்கான நிலத்தடி நீர் ஊற்றுக்களை குறைந்த செலவில் கண்டறிந்து, விவசாயிகள் முதல், மின்சார வாரிய அதிகாரிகள் வரை பலன் அடைந்துள்ளனர். அதனால் தொழில் ரீதியான நீரோட்ட நிபுணராகவும் அரசு இவரை ஏற்றுக்கொண்டது. தான் எப்படி இத்துறையில் ஈடுபட நேர்ந்தது, தனது சாதனைகள் என்ன, அது எவ்வாறு நிகழ்த்தப்பட்டது போன்ற சுவாரஸ்யமான தகவலுடன், இந்தப் பயிற்சியைப் பெறும் வழிமுறைகளையும் வரைபடங்களுடன் இந்நூலில் எளிமையாக விளக்கியுள்ளார். இந்தப் பயிற்சிக்கு அதீத ஈடுபாடும், மனதை ஓர் நிலைப்படுத்தும் தன்மையும் அவசியம் என்று கூறும் ஆசிரியர், அவற்றைப் பெறும் பயிற்சி முறைகளையும் இந்நூலில் விளக்கியுள்ளார். இத்தகைய ஒரு நூல் தமிழில் வெளிவருவது இதுவே முதல் தடவையாகும். -பரக்கத். நன்றி: துக்ளக், 19/2/2014.
—-
யாதும் ஊரே யாவரும் ஸ்மைல் பிளீஸ், ஸ்ரீஹரி, நர்மதா பதிப்பகம், 10, நானா தெரு, பாண்டிபஜார், தி.நகர், சென்னை 17, விலை 75ரூ.
புகைப்பட கலைஞர் ஸ்ரீஹரி தனது வாழ்க்கைப் பதிவுகளையும், புகைப்பட தொழிலில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களையும், நூலாக எழுதியுள்ளார். சமூகத்தின் அடிமட்டத்தில் இருந்து வந்த அவர், தனது அயாராத உழைப்பினால் பல்வேறு நிலைகளை கடந்து புகைப்படக்கலையில் சாதித்த விதம் உண்மையிலேயே வியப்புக்குரியது. நன்றி: தினத்தந்தி, 19/2/2014.