ரோமாபுரி யாத்திரை
ரோமாபுரி யாத்திரை, பாரேம்மாக்கல் கோவர்ணதோர், சந்தியா பதிப்பகம். கவித்துவமும் பயணக் குறிப்பும் தமிழில் மட்டுமல்ல இந்தியாவிலும் இதுதான் முதல் பயண விவரண நூல் என்கிறது சந்தியா பதிப்பகம். பாரேம்மாக்கல் கோ.வர்ணதோர் என்கிற போர்த்துகீசியர் கடல் மார்க்கமாக உலகைச் சுற்றி வரும் இந்தப் பயணத்தினூடாக இந்தியா குறித்தும், தமிழகம் குறித்தும் பல பதிவுகளை செய்துவிட்டுப் போயிருக்கிறார். இந்நூலை யூமா வாசுகி மொழியாக்கம் செய்திருக்கிறார். விவலிய மொழியின் கவிதைக்குப் பக்கமான நடையில் யூமாவின் மொழிபெயர்ப்பு இந்த யாத்திரையை மகிமைப்படுத்துகிறது என்று லிபி ஆரண்யா தன் முன்னுரையில் சொல்கிறார். 18ஆம் நூற்றாண்டின் கடல் பயணத்தையும் குறிப்புகளையும் முதல்முறை வாசிக்கும் வாய்ப்பு பெறுகிறார்கள் தமிழ் வாசகர்கள் என்கிறது சந்தியா பதிப்பகம்.
—-
காலவெளி, விட்டல் ராவ், பாதரசம் பதிப்பகம்.
கோடுகளும் வண்ணக் கலவைகளும் வாழ்க்கையும் மனதை கொள்ளை கொள்ளும் ஓவியர்களின் வாழ்க்கை நாம் அறியாதது. கோடுகளாலும் வண்ணங்களாலும் கவரவைக்க மன அமைதியும் ஆழ்ந்த கவனக் குவிப்பும் தேவைப்படும் இக்கலைக்கு ஏற்ப தங்களை தகவமைத்துக் கொள்ள முயலும் தமிழ் நவீன ஓவியர்கள் குறித்தும் ஓவிய உலகம் குறித்தும் வந்திருக்கும் ஒரே நாவல் இது என பாதரசம் பதிப்பகம் கூறுகிறது. ஆங்கிலோ இந்திய குடும்பங்களின் பழக்க வழக்கம், பண்பாடு குறித்தும் இந்நூல் விரிவாகப் பேசுகிறது. எழுத்தாளர் விட்டல்ராவும் ஓவியர் என்பதால் நாமறியாத ஓர் உலகம் குறித்த ஆழமான பார்வையை அவரால் நமக்குச் சொல்ல முடிந்திருக்கிறது என்கிறது பாதரசம் பதிப்பகம். நன்றி: இந்தியாடுடே, 29/1/2014.