உளி எழுத்துக்கள்
உளி எழுத்துக்கள், யா பப்ளிகேஷன்ஸ், சென்னை, விலை 120ரூ.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே, தமிழ்நாட்டில் சிற்பக் கலை மிகவும் வளர்ந்திருக்கிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இடப்பட்ட தஞ்சை பெரிய கோவிலும், அதற்கு சில நூற்றாண்டுகளுக்கு முன் கற்களைக் குடைந்து அமைக்கப்பட்ட மாமல்லபுரத்து சிற்பங்களும் இதற்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றன. சிற்பக்கலை பற்றி கண்ணையும், கருத்தையும் கவரும் இந்த நூலை உருவாக்கியிருக்கிறார் பெருந்தச்சன் கரு. தட்சிணாமூர்த்தி ஸ்தபதி. குமரி முனையில் விவேகானந்தர் மண்டபத்தை உருவாக்கிய சில்ப கலா பிரவீணா எஸ்.கே. ஆச்சாரி இவரது தந்தை. கன்னியாகுமரியில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையை அமைத்த வி. கணபதி ஸ்தபதி இவரது தாய்மாமன். சிற்பக்கலை பாரம்பரியத்தில் வந்த பெருந்தட்சனும், புகழ் பெற்ற சிற்பி ஆவார். சிற்பத்தில் சிறந்த கோவில்கள் பற்றி கூறுவதுடன் அவற்றை உருவாக்கிய சிற்பிகள் பற்றிய விவரங்களைக் கூறும் கல்வெட்டுகள் கவனிப்பாரற்று கிடப்பது பற்றி வருந்துகிறார். புத்தகம் முழுவதும், ஆர்ட் காகிதத்தில் வண்ணப்படங்களும் அச்சாகியுள்ளது. நன்றி:தினத்தந்தி, 2/4/2014.
—-
குற்றாலதாசன் கவிதைகள், ஸ்ரீ கிருஷ்ணமணி நிலையம், கன்னியாகுமரி மாவட்டம், விலை 250ரூ.
கன்னியாகுமரி மாவட்டத்தின் மூத்த முதல் கவிஞர் தேசிக விநாயகம் பிள்ளையின் பேரன் கவிஞர் குற்றாலம்பிள்ளையின் தாசனான கே.என்.பெருமாள் எழுதிய கவிதைகளின் தொகுப்பு. மழலை, எழுச்சி, முதுமை, தேசியம், சமுதாயம், தமிழ், கல்வி உள்பட 8 பிரிவுகளாக வழங்கப்பட்டுள்ளது. கடின சொற்களுக்கு பொருள் கொடுத்து, சொற்றொடரை பாடலின் அடியில் பிரித்து காட்டியிருப்பது சிறப்பு. நன்றி:தினத்தந்தி, 2/4/2014.