வைரமணிக் கதைகள்
வைரமணிக் கதைகள், வையவன், தாரிணி பதிப்பகம், சென்னை, விலை 450ரூ.
அற்புதமான சிறுகதைகளைத் தருகிறவர் வையவன். பல்வேறு காலகட்டங்களில் எழுதியுள்ள எண்பது சிறுகதைகளை வைரமணிக் கதைகள் என்ற மகுடமிட்டு ஒரே தொகுதியாக வெளியிட்டிருக்கிறார். ஒவ்வொன்றிலும் இயல்பாக இழையோடுகிறது அப்பழுக்கற்ற மனிதம். இந்தக் கதைதான் சிறந்தது என்று குறிப்பிட்டு ஒன்றைச் சொல்லமுடியாத சங்கடத்தை நியாயமான விமர்சகனுக்கு ஏற்படுத்துகிற தொகுப்பு இது. பெரும்பாலான கதைகளில் கிராமப்புற அழகுகளை மிகைப்படுத்தலில்லாமல் சொல்லியிருக்கும் ஆற்றல் வையவன் போன்ற வெகு சிலருக்கே கைவரக்கூடிய ஒன்று. மார்க்ஸ் ஆகப் பெயர் மாற்றம் பெற்ற மார்க்கபந்துவாகட்டும், நாகப்பாம்பை அடித்தோ அடிக்காமலோ சாகவிட்டுவிட்டு அதற்கு இறுதிச் சடங்குகளை வேறு செய்து கரையேற்றிய பின் மனைவியிடம் முகரக்கட்டை என்று பாராட்டுப் பெறுகிற கதைச் சொல்லியாகட்டும், இளம்பருவத்திலேயே விதவையாகி ஆற்றோடுபோன பள்ளித்தோழி சௌதாமினியின் நினைவுகளை ரிடையர் ஆனபிறகும் உதறமுடியாமல் தவிக்கும் பள்ளியாசிரியர் ஆராவமுதமாகட்டும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதம். கதைதானே படித்தோம் என்கிற உணர்வே ஏற்படாமல் நினைவுத்திரையில் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருக்கிறார்கள். கார்கில் என்ற தலைப்பிலேயே ஒரு அருமையான கதை. இந்தத் தேசத்தின் பாதுகாப்புக்கான பணியில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு வரலாறாகிவிடுகிற எத்தனையோ வீரர்கள் வேல்சாமிகள், நாராயண சலுங்கேக்கள் என்று ஒரு நாள் செய்தியாகிவிடுகிற அவலமும் சிந்திக்க வைக்கக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. எத்தனைதான் ஆகட்டும் தாயை இழந்த ரிக்ஷாக்காரர் சிங்காரத்துக்குக் குச்சி ஐஸ் வாங்கித் தந்து சமாதானப்படுத்துகிற சுட்டிப்பெண் சின்னியை வையவன் ஜன்மத்துக்கும் மறக்க முடியாமல் பண்ணிவிடுகிறார் பிஞ்சு சிறுகதைகயில். பெரிய சைஸ் கல்கி தீபாவளிமலரை விடவும் கனமானதாக நூலை வடிவமைத்திருக்க வேண்டாமே என்று நினைக்கத் தோன்றுகிறது. வாசகர்கள் எளிதாகக் கையில் வைத்துப் படிக்க இந்த வடிவம் வசதியாக இல்லை. ஒவ்வொரு கதையும் வெளிவந்த இதழின் பெயர், தேதி விவரம் தந்திருக்க வேண்டியதும் அவசியமில்லையா? வையவன் கதைகளை ஆய்வு செய்ய விரும்புகிறவர்களுக்கும் இது உதவியாக இருக்குமே. நன்றி: கல்கி,12/3/2014.