காற்றின் குரல்
காற்றின் குரல், திருப்பூர் கிருஷ்ணன், திருப்பூர் குமரன் பதிப்பகம், சென்னை 92, பக். 264, விலை 250ரூ.
To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-216-7.html
தெய்வீக இலக்கியமான இராமாயணத்தை நினைத்த நேரத்தில், நினைத்தபடி அனுபவித்து மகிழலாம். ஒவ்வொரு சிறு நிகழ்வையும் மையப்படுத்தி எத்தனையோ சிறுகதைகளைப் பலரும் எழுதியிருக்கிறார்கள். அந்த வகையில் தேர்ந்த இலக்கியவாதியுமான திருப்பூர் கிருஷ்ணன் தமக்கே கைவந்த எளிய நடையில் பல காட்சிகளைக் கண் முன்னால் கொண்டுவந்து நிறுத்துகிறார். சரயூ நதியில் கலந்து மறைய முடிவெடுத்த ஸ்ரீ ராமன் முன்னால், பூமியிலிருந்து களிமண்ணால் செய்த சிலைபோல, அளவற்ற அழகோடு தலையில் மகுடம் தரித்தவளாய் ஒரு தேவி தோன்றுகிறாள். அவர் சொல்கிறார், நான் உனக்கு மாமியார் ஆவேன். ஆமாம் ஜனகபுத்ரியான சீதாதேவியை இவ்வுலகுக்குத் தந்தவள் மாமியாராகத்தானே ஆக வேண்டும் இராமனுக்கு? ஜனகரின் மனைவி மாமியாராவது அப்புறம்தானே? இதுபோன்ற நயமான கற்பனைகள். வால்மீகி ராமாயணத்தில் ஊறி திளைத்து மகிழ்ந்த தம்முடைய தாயார் எடுத்துத் தந்த பல்வேறு குறிப்புகளின் அடிப்படையில் இந்தக் கதைகளை எழுதியிருப்பதாகப் பவித்திரமான நன்றியோடு குறிப்பிடுகிறார். காற்றின் குரல் தொகுப்பில் 44 மலர்களைத் தொகுத்து வழங்கியிருக்கிறார் டாக்டர் திருப்பூர் கிருஷ்ணன். அந்த ஒரு கிண்ணம், எண்ணப்படும் நாட்கள், மரம் கேட்ட வரம் என்ற கவித்துவமான தலைப்புகளில் கதைகளைப் படிக்கும்போது இராமாணயக் காலத்தில் நாமும் வாழ்வது போன்ற தெய்விக அனுபவம் கிடைப்பது, எழுத்தில் கிடைக்கும் மந்திர ஜாலம்தான். -நன்றி: கல்கி, 8/3/2014.