எனக்குள் எம்.ஜி.ஆர்
எனக்குள் எம்.ஜி.ஆர், காவியக் கவிஞர் வாலி, குமரன் பதிப்பகம், சென்னை, விலை 250ரூ.
To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-219-6.html மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்… அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்… நான் ஆணையிட்டால்… அது நடந்துவிட்டால்… கொடுத்ததெல்லாம் கொடுத்தான்… யாருக்காகக் கொடுத்தான்… ஏன் என்ற கேள்வி கேட்காமல் வாழ்க்கை இல்லை… காலத்தால் அழிக்க முடியாத கானங்களை எழுதி எம்.ஜி.ஆர். என்ற நடிகரை மக்கள் திலகமாக மாற்றியது வாலியின் வார்த்தைகள். கவியரசு கண்ணதாசன் கொடிகட்டிப் பறந்த காலத்தில் எழுதுகோலைத் தயங்கித் தயங்கித் தூக்கி, நான் செத்தால் நீதான் இரங்கல் எழுத வேண்டும் என்று கண்ணதாசன் வாயாலேயே சொல்லவைத்த காந்த எழுத்துக்குச் சொந்தக்காரர் வாலி. இனி என்னுடைய படத்துக்கு எல்லாம் வாலி மட்டும்தான் பாடல்கள் எழுதுவார் என்று பொதுக்கூட்டத்தில் எம்.ஜி.ஆர். சொன்னார். அந்தப் பெருமையும், வேறு எந்தக் கவிஞருக்கும் கிடைத்தது இல்லை. அதைவிட முக்கியமானது… தம்பி நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று… பாட்டை பாடுவதற்கு முன் பாட்டை எழுதியவர் வாலி என்று படத்திலேயே எம்.ஜி.ஆர். சொல்வார். அந்த அளவுக்கு எம்.ஜி.ஆரும் வாலியும் ஒட்டியே திரையில் வலம் வந்தார்கள். அவருக்காக மட்டும் மொத்தம் 63 பாடல்களை வாலி எழுதியுள்ளார். அந்தக் காலகட்டத்து நினைவுகளைத் தொகுத்து துக்ளக் இதழில் வாலி எழுதிவந்தார். அதுவே இப்போது புத்தகமாக வந்துள்ளது. எனக்கான அன்னம் எம்.ஜி.ஆர். என்னும் பச்சை வயலிலும், எனக்கான ஆடை எம்.ஜி.ஆர். என்னும் பருத்தி விதையிலும் விளைய வேண்டுமென விதித்தது யார்? ரங்கநாதர் கோயில் ராஜகோபுரத்தில் குந்திக் கிடந்த குயிலுக்கு ராமாவரம் தோட்டத்து ராஜகோகிலமாகி ராப்பகல் ராமச்சந்திரன் புகழைக் கூவிக்கிடக்கும் கொடுப்பினையைக் கூட்டிவைத்தது எது? என்ற கேள்வியோடு கட்டுரை தொடங்குகிறது. விதி என்கிறார் வாலி. அவரது தமிழ் என்பதுதானே உண்மை மொழி. கதாநாயகனுக்கான பாட்டாக எழுதாமல் எம்.ஜி.ஆருக்கான பாட்டாக எழுதியதால்தான் அந்தப் பாடல்கள் வலிமை பெற்றன. ஆரம்பத்தில் பல வரிகளுக்கு எம்.ஜி.ஆரே பயந்துள்ளார். ஆனால் துணிந்து வாலி பயன்படுத்தி இருக்கிறார். நான் ஆணையிட்டால் என்பதற்கு முதலில் நான் அரசனென்றால் என் ஆட்சியென்றால் இங்கு ஏழைகள் வேதனை பட மாட்டார் என்று எழுதியிருக்கிறார். எம்.ஜி.ஆர்தான் பின்னர் மாற்றியிருக்கிறார். நீர் காதல் பாட்டு எழுதினா ரெண்டு மூணு அர்த்தம் வர்ற மாதிரி எழுதுறீரு. என்னுடைய சோலோ பாட்டு எழுதினா அதுல ஏகப்பட்ட அர்த்தங்கள் வர்ற மாதிரி எழுதுறீரு. அது ஆளுங்கட்சிக்கு அலர்ஜியா இருக்குது. பாட்டைக் கொண்டு பதவியில இருக்கிறவங்கள பயமுறுத்துற கவிஞர் நீர்தானய்யா என்று எம்.ஜி.ஆரே சொல்லியிருக்கிறார். எம்.ஜி.ஆர். வாலி ஆகிய இருவர் மூலமாக அரை நூற்றாண்டு கால அரசியல், திரையுலகம் என இரண்டையும் உணர முடிகிறது. அதையும் தாண்டி தமிழ் தளும்பிப் பொங்குகிறது. -புத்தகன். நன்றி: ஜுனியர் விகடன், 11/5/2014.