கொலம்பசின் வரைபடங்கள்

கொலம்பசின் வரைபடங்கள், யோ. கர்ணன், வடலி வெளியீடு, சென்னை, விலை 55ரூ.

மன்னன் இல்லை. தளபதிகள் இல்லை. போர் வீரர்களென்று யாரும் இல்லை. நம்பிக்கையின் சிறு துரும்பெதுவும் மிதக்காத கரைகளற்ற கடலின் திசையறியாத பயணிகள். கடலடிக்கும் எல்லை வரையாகவும் இருகரையும் விரிந்திருந்த ராஜ்யம் சுருங்கி ஒரு பொட்டல்வெளியில் எரிந்தழிந்தது. உயிராலும் ரத்தினத்தாலும் சதைகளினாலும் கட்டியெழுப்பப்பட்டு இருந்த கனவு சிதறிக்கிடந்தது. நந்திக்கடலில் கலந்த இன்னோர் ஆறாக ரத்த ஆறுமிருந்தது ஈழத்தின் இன்றைய நிலை குறித்த யோ. கர்ணனின் காட்சிப்படுத்துதல் இதுதான். இந்த நிலைக்கு முன்னதாக இறுதிகட்டத்தில் நடந்த கலங்கவைக்கும் நிகழ்வுகளை மனக்கண் முன் கொண்டுவருகிறார். படிக்க முடியாத அளவுக்கு நெஞ்சு பதறும் காட்சிகள் இவை. விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்தவர். போரில் ஒரு காலை இழந்தவர். தேவதைகளின் தீட்டுத்துணி, சேகுவேரா இருந்த வீடு ஆகிய சிறுகதைத் தொகுதிகள் மூலமாக இலக்கிய கவனத்தைப் பெற்றவர். அவரது மூன்றாவது புத்தகம் இது. இறுதிகட்ட போரின் இறுதிகட்ட நிமிடங்களை தன்னுடைய சுயவாழ்க்கைப் பதிவுகளாகச் சொல்கிறார். அது என்ன கொலம்பசின் வரைபடம்? சிங்கள பயங்கரவாதத்தின் சித்ரவதை தாங்க முடியாமல் தப்பிக்க நினைத்த ஈழத்தமிழர்கள், எப்படியாவது தமிழகத்துக்கோ வேறு வெளிநாடுகளுக்கோ படகு பிடித்து போய்விட மாட்டோமா என்று தவிக்கிறார்கள். ஆனால், படகு கிடைக்க வேண்டும், வெளியில் வர வேண்டும், பாதை தெரிய வேண்டும், நாடுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும்தானே. அப்படி நடக்காமல் நடுக்கடலில் நிர்மூலம் ஆனவர்கள் எத்தனையோ பேர். தான் தேடிவந்த நாட்டை கொலம்பஸ் மிகச் சரியாகக் கண்டுபிடித்துவிட்டார். ஆனால் ஈழத் தமிழ் மக்கள் பலரால் அப்படி கண்டுபிடிக்க முடியவில்லை. அதனைத்தான் குறிப்பால் உணர்த்துகிறார் யோ.கர்ணன். கொலம்பஸுக்கு இருந்தது ஒரு சவால். கடலுக்கு மட்டுமே வரைபடம் வரைய வேண்டியிருந்தது. எங்களுக்கோ இரண்டு சவால்கள். கடற்பயணங்கள் புறப்படுவதற்காக கடற்கரைகளைச் சென்றடைவதற்கும் வரைபடங்கள் வரைய வேண்டியிருந்தது என்கிறார். இப்படி வெளியேறவிடாமல் இலங்கை ராணுவம் ஒரு பக்கமும் புலிகள் அமைப்பு இன்னொரு பக்கமுமாக துப்பாக்கி மூலமாக தடுத்த காட்சிகள் இந்தப் புத்தகத்தில் விரிகிறது. புலிகள் அமைப்பின் அரசியல் துறைக்கும் புலனாய்வு துறைக்குமான இடைவெளியை அம்பலப்படுத்துகிறது. தாக்குதல் அணிப் போராளிகளுக்கும் அரசியல் போராளிகளுக்கும் இருந்த இடைவெளியையும் சொல்கிறது. பகிரங்கமாக அறிவிக்கப்பட்டிருந்த அநீதியும், ரகசியமாக நடைமுறையில் இருந்த நீதியுமாக அந்த நாட்கள் அமைந்திருந்தன என்கிறார். நாம் வாழ்ந்த வாழ்வும் மரணமும் பயனற்றவை என்றான பின், லட்சியங்களுக்கும் கனவுகளுக்கும் பொருள் என்ன? என்று யோ. கர்ணன் கேட்கும் கேள்விதான் புத்தகத்தை மூடிவைத்த பிறகும் யோசிக்கவைக்கிறது. -புத்தகன். நன்றி: ஜுனியர்விகடன், 28/5/2014.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *