முதலாம் இராசராச சோழன்
முதலாம் இராசராச சோழன், கே.டி. திருநாவுக்கரசு, விகடன் பிரசுரம், சென்னை, பக். 326, விலை 135ரூ.
முதலாம் இராசராசனின் வரலாற்றை சொல்லும் நூலாக இது இருந்தாலும் நூலின் இரண்டாவது பகுதியில்தான் இராசனின் வரலாறு தொடங்குகிறது. முதலாம் இராசராசசோழனின் முன்னோராகிய மன்னர்கள் திருமாவளவன், முதலாம் பராந்தகன், விசயாலயன், ஆதித்தன், பராந்தகன் பரகேசரி, கண்டராதித்தன், அரிஞ்சயன், சுந்தர சோழன் போன்றோரின் ஆட்சிக் காலச் சாதனைகள் சுருக்கமாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இராசராச சோழன் வரலாறு, காந்தளூர் போர், ஈழப் படையெடுப்பு, கலிங்க வெற்றி போன்ற பகுதிகளோடு தொடங்கி, இராசராசனின் ஆட்சி முறை, தமிழ்ப் பணி, சைவப் பற்று, திருமுறைகளை மீட்டெடுத்தல், தஞ்சையில் பெருவுடையார் கோயிலைக் கட்டுதல், அக்கோயிலின் அமைப்பு முறை, இராசராசனின் 35 சிறப்புப் பெயர்கள், அப்பெயர்களுக்கான காரணங்கள், அம்மன்னன் காலத்துக் கல்வெட்டுகள், செப்பேடுகள், நாணயங்கள் முதலிய பல பகுதிகளாக விரிகின்றது. மாமன்னன் இராசராசன் குறித்து இதுவரை அறியப்படாத பல புதிய செய்திகள் இந்நூலில் உள்ளன. எல்லாத் தகவல்களுமே அவற்றுக்குரிய தரவுகளோடு குறிப்பிடப்பட்டிருப்பதால் நம்பகத்தன்மையுடன் உள்ளன. நூலாசிரியர் வட மொழி உச்சரிப்புகளைப் பிடிவாதமாகத் தவிர்த்திருப்பதால் (இராசஇராச விசயம், அபராசித வர்மன்) வாசிக்கும்போது சிற்சில இடங்களில் நெருடல் ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை.மேலும் பொருளடக்கம் இல்லாதது ஒரு குறிப்பிட வேண்டிய குறையே. நன்றி: தினமணி, 26/5/2014.
—-
பகவத் கீதாசாரம், எழுதி வெளியிட்டவர்-ஆ. சிதம்பர குற்றாலம், 256, வீட்டுவசதி வாரியம், தாராபுரம், விலை 50ரூ.
பகவத் கீதையில் உள்ள கீதா உபதேசங்களைக் குறிக்கும் சிறு நூல். நன்றி: தினத்தந்தி, 28/5/2014.