சேக்கிழார் பிள்ளைத்தமிழ்
சேக்கிழார் பிள்ளைத்தமிழ், மூலமும் விளக்கவுரையும், விளக்கஉரை-வித்துவான் பாலூர் கண்ணப்பமுதலியார், பூம்புகார் பதிப்பகம், சென்னை, பக். 926, விலை 580ரூ.
To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0001-789-8.html சேக்கிழார் பெருமான் மீது கொண்ட தீராத பக்தியின் காரணமாக, மகாவித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை பாடிய நூல்தான் சேக்கிழார் பிள்ளைத்தமிழ். இது குமரகுருபரரின் மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழுக்கு அடுத்த நிலையில் வைத்துப் போற்றப்படுகிறது. இவ்வரிய நூலுக்கு அரும்பத உரையும், விளக்க உரையும் எழுதியுள்ளார் பாலூர் கண்ணப்ப முதலியார். இவ்விளக்கவுரை சாதாரண உரையாக அல்லாமல், பெருவிளக்க உரையாகவும் அமைந்துள்ளது. இப்பெருவிளக்க உரையில், மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் கற்பனைத்திறன், நுண்ணறிவுத்திறன், கவிவளம், சைவ சமயப் பற்று, சித்தாந்தப் பேரறிவு, தாம் திருமுறைகளிடத்தில் கொண்ட ஈடுபாடு, சைவ சமயாச்சாரியாரிடத்துக் கொண்ட அன்பு, தொடர்பு கொண்டிருந்த திருவாவடுதுறை ஆதினத்தில் இருந்த பற்று, குருமகா சந்நிதானங்களிடத்தில் வைத்திருந்த அன்பு, சந்தானாச்சாரியார்களிடத்தில் கொண்ட அன்பு முதலியவை நன்கு எடுத்து எழுதப்பட்டுள்ளன எனத் தம் முன்னுரையில் கூறியிருக்கிறார் கண்ணப்ப முதலியார். மேலும், பிள்ளைத்தமிழ் பற்றிய ஓர் ஆராய்ச்சிக் கட்டுரையும் இடம் பெற்றுள்ளது. இக்கட்டுரையின் வாயிலாக தொல்காப்பியர் காலத்துக்கு முன்னும், அவர் காலத்திலும், சங்க காலத்திலும், அதற்குப் பிற்பட்ட காலத்திலும் பிள்ளைத்தமிழ் நூலுக்குரிய கரு உண்டு என்பதையும், பின்னர் எவ்வாறு பிள்ளைத்தமிழ் நூல்கள் பெருகத் தொடங்கின என்பதையும், பிள்ளைத்தமிழ் இலக்கியம் பாடுவதற்குரிய இலக்கணங்களையும் அறிந்து கொள்ள முடிகிறது. இவை தவிர தமிழைப் பற்றிய அமைப்பு முறை, பாடல்களைப் பற்றிய கருத்துச் சுருக்கம், சேக்கிழார் பெருமான் காலம் பற்றிய விளக்கம், அவரது வாழ்க்கை வரலாறு போன்றவையும் இடம் பெற்றுள்ளன. ஏழாவது பாடலின் தொடக்கமான பொய்யடிமை இல்லாத செய்யுளின் இலக்கியம் புகல் என்ற அடிக்கு, 64 நாயன்மார்களுள் பொய்யடிமை இல்லாத புலவர் யார்? அவர் தனி அடியாரா? அல்லது தொகையடியார்களா? என்பதற்கான பரந்து விரிந்த விளக்கம் அனைவரும் அறிய வேண்டிய ஒன்று. பாலூர் கண்ணப்ப முதலியாரின் மிகக் கடினமான உழைப்பில் உருவான இந்நூல், காலத்தால் அழியாத ஆவணமாகும். நன்றி: தினமணி, 25/6/2014.
—-
இந்தியாவைக் காப்பாத்துங்க, நூல் கிடைக்கும் இடம்-இ. சண்முகசுந்தரம், அரும்பாக்கம், சென்னை 106, விலை 50ரூ.
இந்தியா முன்னேறுவதற்கு என்ன செய்யவேண்டும் என்பதற்கு பல்வேறு யோசனைகளைக் கூறுகிறார் நூலாசிரியர் இ. சண்முகசுந்தரம். கங்கை-காவிரி நதிகளை இணைக்கவேண்டும். இதனால் தண்ணீர் பிரச்சினை தீருவதுடன் 5 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று வற்புறுத்துகிறார். நன்றி: தினத்தந்தி, 28/5/2014.