கரிசக் காடு
கரிசக் காடு, எஸ்.எஸ். போத்தையா, தொகுப்பும் பதிப்பும்- பா. செயப்பிரகாசம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை, பக். 188, விலை 140ரூ.
கரிசல் மண்ணின் நாட்டுப்புறங்களில் மக்களின் அன்றாட வாழ்வில் பயன்படுத்தப்படும் சொலவடைகள், நம்பிக்கைகள், யுக்திக் கணக்குகள் எல்லாவற்றையும் சேகரித்துத் தொகுப்பதையே தனது வாழ்நாள் பணியாகக் கொண்டிருந்தவர் எஸ்.எஸ். போத்தையா. ஆசிரியராகப் பணிபுரிந்து வந்த அவருக்குத் தலைமையாசிரியர் பதவி உயர்வுடன் இடமாற்றமும் கிடைத்தபோது, தனது நாட்டுப்புற இயல் சேகரிப்புப் பணிக்கு இடமாற்றம் தடையாக இருக்கும் என்பதால், பதவி உயர்வை வேண்டாம் என்று மறுத்த பைத்தியக்கார மனுஷனாக இருந்தவர் அவர். அவர் பல இடங்களுக்குச் சென்று, பலகாலமாகச் சுற்றித் திரிந்து சேகரித்த கரிசக் காட்டின் சொலவடைகளை, அம்மக்களின் நம்பிக்கைகளை எல்லாம் மிக அற்புதமாகத் தொகுத்து பதிப்பித்திருக்கிறார் பா. செயப்பிரகசாம். உழுகிற மாடு ஊர்வழி போனா, அங்கயும் ரெண்டு ஏர்கட்டி அடிப்பாங்களாம், கடன் வாங்கிக் கடன் கொடுத்தவனும் கெட்டான், மரமேறிக் கைவிட்டவனும் கெட்டான், கோமணத்துணியிலே துட்டிருந்தா, கோழி கூப்புட நாலு பாட்டுவரும் போன்ற கரிசக்காட்டு சொலவடைகள் இன்றைய நகர மக்களின் வாழ்க்கைக்கும் பொருந்துவதாக இருப்பது நம்மை வியக்க வைக்கிறது. மாதப் பிறப்பன்று எண்ணெய் தேய்த்துக் குளிக்கக்கூடாது. அக்னி மூலையில் இடம் வாங்கக்கூடாது. காட்டில் பயிர் நன்றாயிருந்தால் வீட்டிலுள்ள கிழடுகள் காலியாகிவிடும் என்பன போன்ற மக்களின் நம்பிக்கைகள் படிப்பதற்குச் சுவையாக உள்ளன. விவசாயிகளின் சொத்தான மாடுகள், ஆடுகள் பற்றிய நுட்பமான குறிப்புகள் திகைக்க வைக்கின்றன. உதாரணம், பாயும் மாட்டின் கொம்பை அறுத்து 40 நாளைக்கு கொம்பில் புளிய இலையை வைத்து அடித்தால் பாயாது. கிராமப்புறங்களில் வழங்கி வரும் யுக்திக் கணக்குகள் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. கரிசல் மண்ணின் மணம் வீசும் இந்நூல், எல்லாருடைய உள்ளங்களையும் கொள்ளைக் கொள்ளும் என்பது உறுதி. நன்றி: தினமணி, 2/6/2014.
—-
எரிக்கும் பூ, க. பாலபாரதி, குமுதம் பப்ளிகேஷன்ஸ், சென்னை, விலை 145ரூ.
To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-218-4.html சமூக நிகழ்வுகள், அரசியல் நடப்புகள் என்று சமீபத்தில் இந்தியாவில் நடந்த அத்தனை நிகழ்வுகளையும் தனக்கே உரிய பாணியில் படைத்திருக்கிறார். நன்றி: குமுதம், 4/6/2014.