அன்பின் நடுநரம்பு
அன்பின் நடுநரம்பு, அகச்சேரன், தக்கை பதிப்பகம்,சேலம், விலை ரூ. 10
கவிதைகளாகும் மனிதர்கள் பராக்குப் பார்த்தல் ஒரு கவிஞனுக்கு இருக்க வேண்டிய முக்கியமான அம்சம். பெரும்பாலான இன்றைய நவீனத் தமிழ்க் கவிதைகள் பராக்குப் பார்த்தலை அடிப்படையாகக் கொண்டவை எனலாம். பராக்குப் பார்ப்பதற்கு வழியமைத்துத் தருபவை முக்கியமாகப் பேருந்துப் பயணங்கள்தாம். இம்மாதிரியான பயணங்கள் குறித்துத் தமிழ்க் கவிதைகளில் ஏற்கனவே பதிவுகள் உள்ளன. அவற்றுள் முக்கியமானது சமீபத்தில் வெளிவந்துள்ள அகச்சேரனின் அன்பின் நடுநரம்பு. விற்பனைப் பிரதிநிதியாக இருக்கும் அகச்சேரனின் பேருந்துப் பயணங்களில் அவர் தன் முழு ஆளுமையையும், இயல்புகளையும் வெளிப்படுத்த முயல்கிறார். பிரிவையும் துயரத்தையும் காதலையும் காமத்தையும் தன் பணி குறித்த அயர்ச்சியையும் ஒருசேரக் கவிதைகளின் வழியாகக் கடக்க யத்தனிக்கிறார். தனிப்பட்ட ஆளுமையைக் கவிதைகளுக்குள் அனுமதிப்பது துணிச்சலான விஷயம். அதைத் தன் முதல் கவிதையிலேயே அகச்சேரன் முயன்று பார்க்கிறார். விளம்பரத்தில் சிரிக்கும் நாயகி, திருஷ்டி பொம்மையாகிவிட்ட திருவள்ளுவர், யாசகம் கேட்கும் முதியவள், பேப்பர் விற்கும் ஊனமுற்ற சிறுவன், சாயம் போன ரப்பர் வளையல் அணிந்த வியாபாரப் பெண் எனப் பேருந்து பயணங்களில் ஊடே இவர் சந்திக்கும் மனிதர்களாகக் கூடுவிட்டுக் கூடு மாறி அவர்களின் தனிப்பட்ட மன இயல்புகளுடன் அவர்களைத் தன் கவிதைகளுக்குள் சிருஷ்டிக்க விரும்புகிறார். ஆனால் சிருஷ்டிக்கு அவர் எடுத்துக்கொள்ளும் கால அவகாசங்களில் அதனுடன் அவரது இயல்புகளும் சேர்ந்துகொள்வதும் நேரிடுகிறது. ஆனால் இது தவிர்க்க முடியாத அம்சம்தான். பேருந்துப் பயணங்கள் தவிர்த்துச் சில கவிதைகளும் இத்தொகுப்பில் உண்டு. கோடைக்காலக் குறிப்புகள் என்னும் வசன கவிதை மொத்தத் தொகுப்பிலிருந்து வேறுபட்டு இன்னொரு பரிணாமத்தில் வெளியிடப்பட்டுள்ளது. எதிர்பார்ப்புகளின்றி கவனித்தலின் ஏக்கங்களின்றி நின்று கனிகிறது அவ்ஒளிக்கனி இந்தக் கவிதையில் மொழியின் சௌந்தர்யமும் கூடியிருக்கிறது. யவனிகா ஸ்ரீராம், ஷங்கரராம சுப்ரமணியன் ஆகியோர் இதுபோன்ற சமூக நிகழ்வுகளை அதன் அரசியல் பின்னணியுடன் கவிதைகளாக்கியிருக்கிறார்கள். அகச்சேரன் கைக்கொண்டுள்ள பெரும்பாலான கவிதைகளில் அதற்கான அம்சங்களைப் பார்க்க முடிகிறது. சமூகத்தை நோக்கும் கண்ணாடியாக அவருக்குப் பேருந்தின் ஜன்னல் உள்ளது. அதன் வழியாக அகச்சேரன் பார்க்க விரும்புவது ரொமாண்டிக்கான காட்சிகளை அல்ல. சமூக வாழ்க்கையின் இயல்புகளைத்தான் என்பதை இந்தக் கவிதைகள் புலப்படுத்துகின்றன. முதல் தொகுப்பில் இவ்வளவு தெளிவாகத் தன்னை வெளிப்படுத்தியிருக்கும் அகச்சேரன் அடுத்த தொகுப்புகளில் இதில் உள்ள பலவீனங்களைக் களைவார் என நம்பலாம். -ஜெய். நன்றி: தமிழ் இந்து, 28/5/2014.3