தஞ்சைப் பெரிய கோயில்
தஞ்சைப் பெரிய கோயில், வி.அ. இளவழகன், பூங்கொடித்தாமரை வெளியீட்டகம், தஞ்சாவூர், பக். 220, விலை 160ரூ.
தஞ்சைப் பெரிய கோயிலின் பெருமையும் சிறப்பும் அனைவரும் அறிந்ததே. சைவ சமய இலக்கியக் காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு சிற்பங்களையும், ஓவியங்களையும் கொண்ட சிவ தத்துவத்தின் வெளிப்பாடாக விளங்கும் தஞ்சை பெரிய கோயிலை நாம் எப்படிப் போற்றிப் பாதுகாக்க வேண்டும் என்பதை, தான் மொழி பெயர்த்த திருவாசக நூலின் முன்னுரையில் ஜி.யு.போப் கூறியுள்ளார். வெளிநாட்டவர்களுக்கு நம் கோயில்களின் அருமை பெருமைகள் தெரிந்துள்ள அளவு தமிழ்நாட்டவர்க்குத் தெரியவில்லை என்பது கவலைக்குரியது. இந்நூலில் விஜயாலயசோழன் முதல் இராஜேந்திரசோழன் வரை உள்ள சோழர் குல வம்சாவளி விளக்கப்பட்டுள்ளது. இரண்டு கைகள், பத்துவிரல்கள், உளிகள், நெம்புகோல், மாட்டுவண்டிகள், யானைகள் இவற்றை மட்டுமே கொண்டு 1000 ஆண்டுகட்கு முன்னால், எந்தவித நவீன எந்திரப் புனைவுகளும் இல்லாமல் இவ்வளவு பெரிய கோயிலை எடுப்பித்த பரம்பரையினரா இப்படிக் கோயிலுக்கு வெளியே நிற்கிறார்கள்? என்று கேட்ட பிரெஞ்சு நாட்டுப் பயணியின் கேள்வி போன்ற பல வெளிநாட்டவரின் கேள்விகள்தாம் ஆசிரியரை இப்படி ஒரு நூலை எழுதத்தூண்டியதாம். தஞ்சைப் பெரிய கோயிலின் சிறப்பு, ஓவியங்கள், கல்வெட்டுகள், நாட்டியம், கட்டடக்கலை, கற்பனைச் செய்திகள், கோயிலில் ஏற்பட்ட தேசங்களும், உருக்குலைப்புகளும், கருவூர்வேரும் திருவிசைப்பாவும் விடைதேடும் வினாக்கள் எனப் பலவற்றையும் இந்நூலில் விளக்கியுள்ளார். இறுதியில் விடைதேடும் 36 வினாக்களை இணைத்துள்ளார். விடை தெரிந்தவர்கள் சொல்லலாம். இதில் குறிப்பிடத்தக்க ஒன்று, தஞ்சைப் பெரியகோயில் கல்வெட்டுகளை மட்டும்தான் மிகச் சுலபமாக எல்லோராலும் படித்துவிட முடியும் என்பது. அதைப் படிக்கும் வழியையும் நூலாசிரியர் நமக்கு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார். நன்றி: தினமணி, 30/6/2014.
—-
திருமயிலைத் தல புராணம், ஜெ. மோகன், சிவாலயம் வெளியீடு, சென்னை, விலை 270ரூ.
மயிலாப்பூர் எனப்படும் திரு மயிலையின் தல வரலாறு பற்றி சைவ புராணங்களிலும், கந்த புராணத்திலும் கூறங்பபட்டுள்ள தகவல்களைக் கொண்டு திருவண்ணாமலை ஆதீன அமுர்தலிங்கத் தம்பிரான் இயற்றிய இந்த நூல், 115 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது பதிப்பிக்கப்பட்டு இருக்கிறது. இதில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு பாடலையும் எளிதில் புரிந்துகொள்ள வசதியாக அதற்கு பொருள் விளக்கம் கொடுத்து இருப்பதால் அவற்றை அர்த்தம் தெரிந்து படிக்க வசதியாக இருக்கிறது. நன்றி: தினத்தந்தி, 25/6/2014.