Srilanka Hiding the Elephant
Srilanka Hiding the Elephant, பேராசிரியர் ராமு மணிவண்ணன், அரசியல் மற்றும் பொது நிர்வாகத் துறை, சென்னை, பக். 976, விலை 2500ரூ.
போர்க்குற்ற விசாரணை சான்றான ஆவணம் இலங்கையில் நடந்த இறுதிப்போரில் நிகழ்ந்த போர்க்குற்றங்களுக்கான சாட்சியங்கள் அணிவகுக்கின்றன. இலங்கை அரசின் பயங்கரவாதம், இனப்படுகொலைக்காக கட்டமைத்த அதன் அரசியல், இறுதித் தீர்வுக்காக மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட முழுமையான யுத்தம். அதில் பாதிக்கப்பட்டோர் நேரில் கண்டோர் சாட்சியப் பதிவுகள் என்ற 3 தலைப்புகளில் நூலாசிரியர் ஈழத் தமிழர் போராட்டம், வரலாற்றுப் பின்னணிகளை சர்வதேச சட்டங்கள், தேசிய இனங்களுக்கான உரிமைகள், இறையாண்மைக்குரிய அரசுக்கு வரையறுக்கப்பட்டுள்ள உரிமைகள் என்ற பார்வையில் விளக்குகிறார். இவற்றோடு, இறுதிக்கட்டப் போரில் பாதிக்கப்பட்டோர், நேரில் கண்டவர் சாட்சியங்கள், கொலைக்களமாக மாற்றப்பட்ட போரில்லாத பகுதி. ஐ.நா. பொதுச் செயலாளர் பான்கி மூன் நியமித்த குழுவின் அறிக்கை. கடமை தவறிய அய்.நா. அமைப்புகளை அம்பலப்படுத்தும் ஐ.நா. உள்ளக அறிக்கை-(அந்த அறிக்கையில் பல பகுதிகள் கறுப்பு மையிட்டு அழிக்கப்பட்டுள்ளன) மனித உரிமைகளுக்கான யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் அமைப்பின் அறிக்கை, தமிழர் பகுதிகளில் பெண்கள் பாதுகாப்பின்மையை விளக்கிடும் சர்வதேச நெருக்கடிகளுக்கான குழுவின் அறிக்கை, சர்வதேச மன்னிப்புச் சபை, மனித உரிமை கண்காணிப்பு, இறுதிப் போருக்குப் பிறகு, வடக்கு, கிழக்கு மாநிலங்களில் மக்கள் மீதான ராணுவம் மற்றும் அரசு கூட்டு அடக்குமுறைகளை விளக்கும் தமிழ் தேசிய கூட்டணியின், அறிக்கை, தமிழர்பகுதிகளில் ராணுவ ஆக்கிரமிப்புகள், ராணுவ அடக்குமுறைகளைக் கண்டித்த சிங்கள பத்திரிகையாளரின் மரண வாக்குமூலம் என முக்கிய ஆவணங்கள் பலவும் இணைக்கப்பட்டுள்ளன. இணைக்கப்பட்டுள்ள மற்றொரு முக்கிய ஆவணம், 1474 யாழ்ப்பாணத் தமிழர்கள் இணைந்து சிறீலங்கா நீதிமன்றத்தில் நிலம் கையகப்படுத்தும் அதிகாரி மற்றும் நில மேம்பாட்டுத் துறை அமைச்சருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் மனு. இறுதிப் போருக்குப் பின் குடியிருப்புக்கு திரும்பிய இந்தத் தமிழர்களின் நிலங்கள், அறிவிப்பு இல்லாமலே இலங்கை அரசால் கைப்பற்றப்பட்டுள்ளன. யாழ்ப்பாண மாவட்டத்தில் தமிழர்களுக்கு உரிமையான 6381 ஏக்கர் நிலம், ராணுவத்தளம் அமைக்க பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. 976 பக்கங்கள் கொண்ட இந்த நூல் ஆவணப் பெட்டகமாக வெளிவந்திருக்கிறது. 4 அடிப்படையான கருத்துகளை ஆழமாகப் பதிவு செய்திருக்கிறார் நூலாசிரியர். ஒன்று ஆளும் சிங்களப் பேரினவாத ஆட்சியின் நோக்கம் இனப்படுகொலைதான். இரண்டு இதற்கான நிகழ்ச்சி நிரல்கள் 60 ஆண்டுகளாகவே திட்டமிட்டு தொழில்படுகின்றன. மூன்று அரசு மட்டுமின்றி, ஆளும் வர்க்கமான அறிவு ஜீவிகள் (புத்த பிக்குகள் உள்ளிட்டோர்) அழிவுத்தொழித்தலுக்கான அதிகாரங்களை அரசு ஆதரவோடு கையில் எடுத்துள்ளனர். நான்கு ஆட்சியாளர்களும் ஆளும் ஆதிக்க அறிவுஜீவிகளும் தமிழர்களை ஒடுக்குவதற்கான அரசியல் மற்றும் சமூக வெளியை இலங்கை அரசியல் கட்டமைப்பே உருவாக்கித் தருகிறது. 1948 ஆம் ஆண்டில் தொடங்கி வைக்கப்பட்ட தமிழர் இன அழிப்புக்கான திட்டங்கள் முடிவுக்குக் கெண்டு வரப்பட்டதற்கான வெற்றிக் கொண்டாட்டமே முள்ளி வாய்க்கால். இப்படி இனப்படுகொலைக்காகவே நடத்தப்பட்ட இறுதிப் போருக்கு இலங்கை அரசு ஒவ்வொரு கால கட்டத்திலும் படிப்படியாக தன்னை தயார்படுத்தியே வந்திருப்பதை விரிவாகப் பேசுகிறது இந்த நூல். திட்டமிடப்பட்ட இனப்படுகொலை முடிந்தபிறகுதான், 2009இல் சர்வதேச சமூகம், மனித உரிமை மீறல்களையும் போர்க் குற்றங்களையும் பேசத் தொடங்கியது. ஊடகங்கள், சர்வதேசப் பார்வையாளர்கள், தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் என அனைவரையும் போர்ப் பிரகடனப் பகுதியிலிருந்து வெளியேற்றிவிட்டு, சாட்சிளற்ற போர் இலங்கையில்தான் உலகிலேயே முதன்முதலாக அரங்கேறியது. இப்போது சர்வதேச மவுனம் கலையத் தொடங்கியதற்கான காரணங்கள் என்ன?சொந்த நாட்டு குடிமக்கள்னின் உயிர் வாழும் உரிமைக்கே பொறுப்பேற்கத் தயாரா இல்லாத ஓர் அரசு இலங்கையில் நடப்பதும், தமிழர்களின் பாரம் பிரிய பிரதேசங்களை ராணுவத்தின் பிடிக்குள் முழுமையாகக் கொண்டு வந்ததும்தான். முழுமையான ஒரு போரை நடத்துவதற்கான அரசியல் வெளியை சர்வதேச சமூகம்தான் இலங்கைக்கு உருவாக்கித் தந்தது. ஆனால் அந்த அரசியல் வெளி நேர்மையான அரசியல் தீர்வுகளை நோக்கி நகர்த்துவதற்கு பயன்படுத்தப்படவில்லை என்பதுதான் சோகம் என துல்லியமாக படம் பிடிக்கிறது நூல். சாட்சிகளற்றப் போரை நடத்தினாலும், சாட்சிகளற்ற களத்திலிருந்து எழுந்த சாட்சிகளின் பதிவுகளையும் சான்றாவணங்களையும் முழுமையாகத் தொகுத்திருக்கிறது இந்நூல். சர்வதேச நாடுகளின் கண்களைத் திறக்கச் செய்யவும், இனப்படுகொலை போர்க்குற்ற விசாரணைகளுக்கான சான்று ஆவணமாகவும் இந்நூல் பயன்படும். -விடுதலை ராஜேந்திரன். நன்றி: இந்தியா டுடே, 23/7/2014.