சிந்தனைக் களஞ்சியம்
சிந்தனைக் களஞ்சியம், உ. நீலன், அருள் பதிப்பகம், சென்னை, விலை 130ரூ.
பல நூல்களைப் படித்த திருப்தியை தரக்கூடிய அளவுக்கு பல்வேறு செய்திகள் மற்றும் கருத்துக்களின் தொகுப்பாக இந்நூல் அமைந்துள்ளது. குறிப்பாக, பிரபலமானவர்களின் வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சிகளைப் பதிவு செய்யும்போது, அவற்றிலுள்ள பலம், பலவீனங்களையும் ஆரோக்கியமான விமர்சனத்துடன் குறிப்பிடுவது இந்நூலாசிரியரின் தனிப் பணியாகும். இந்நூலின் முதல் கட்டுரையான காந்தியடிகளுக்கு ஏன் நோபல் பரிசு கிடைக்கவில்லை? என்ற காரணங்களை படிக்கும்போது, தேர்வு கமிட்டியினர் இப்படியெல்லாமா யோசிப்பார்கள் என்று தோன்றுகிறது. எத்தனையோ இக்கட்டான நேரங்களில் மிகச் சரியான முடிவுகளை எடுத்த காமராஜ், இந்த ஒரு விஷயத்தில் தவறி விட்டாரே. இல்லையென்றால் தமிழகத்தில் இப்படி ஒரு அரசியல் அவல நிலை தோன்றியிருக்காதே என்பதை காமராஜ் செய்த தவறு என்ற கட்டுரை சுட்டிக்காட்டுகிறது. இந்தியா சுதந்திரம் அடைந்த அன்று, அதற்காக பெரிதும் பாடுபட்ட காந்திஜி மட்டும் மகிழ்ச்சியாக இல்லை. அதற்கான காரணங்களை மகாத்மா காந்திஜியின் மௌனம் என்ற கட்டுரை விளக்குகிறது. குருவே ஆனாலும் குற்றம் குற்றமே, ஜின்னா ஒரு தேசியவாதியா? பெர்னாட்ஷாவின் மறுபக்கம், ஹிட்லர் மன்னிப்பு கேட்டார், கடவுள் உண்டா? ஹிந்து மதப் புதிர், மரணத்தின் இலக்கு என்ன? இப்படி ஆர்வத்தைத் தூண்டும் 65 கட்டுரைகள், இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. -பரக்கத். நன்றி: துக்ளக், 27/8/2014.
—-
தன்னம்பிக்கை சிறகுகள், கவிதாசன், குமரன் பதிப்பகம், சென்னை, விலை 60ரூ.
தன்னம்பிக்கை இருந்தால் தோள்கள் இமயத்தை சுமக்கும் என்று தன்னம்பிக்கையை மையமாக வைத்து எழுதப்பட்ட கவிதை தொகுப்பாகும். சுற்றுச்சூல், மகிழ்ச்சி, நேர்மையின் வழி, காந்தியக் கொள்கை போன்ற பல்வேறு நற்பண்புகளின் ஆளுமையாய் இக்கவிதைகள் நூலிற்கு வலிமை சேர்த்துள்ளன. ஒவ்வொரு கவிதைகளும் வாழ்க்கைக்கு உரம் ஊட்டுவதாக அமைந்திருப்பதுடன், அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் அமைந்துள்ளது. நன்றி: தினத்தந்தி, 20/8/2014.