ஜெயகாந்தன் கதைகள்
ஜெயகாந்தன் கதைகள், விகடன் பிரசுரம், சென்னை, விலை 350ரூ.
தமிழ்நாட்டில் புகழின் சிகரத்தைத் தொட்ட எழுத்தாளர்களில் ஜெயகாந்தன் முக்கியமானவர். ஆரம்பத்தில் சிறு பத்திரிக்கைகளில் எழுதி வந்த அவர், 60களில் ஆனந்த விகடனில் எழுதினார். அவருடைய கதைகள் ஒவ்வொன்றும் முத்திரைக்கதைகளாகப் பிரசுரிக்கப்பட்டன. அதன் மூலம் மிகச்சிறந்த எழுத்தாளர் என்ற அங்கீகாரம் அவருக்குக் கிடைத்தது. சமீபத்தில் 80வது பிறந்த நாளைக் கொண்டாடிய ஜெயகாந்தனுக்கு மேலும் பெருமை சேர்க்கும் விதத்தில், விகடன்பிரசுரம் அவருடைய கதைகளைப் புதுமையான முறையில் வெளியிட்டுள்ளது. அதாவது 50 வருடங்களுக்கு முன் ஜெயகாந்தன் கதைகள் எந்த மாதிரி வடிவமைப்பில், எந்த ஓவியங்களுடன் பிரசுரிக்கப்பட்டனவோ, அதே வடிவத்தில் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன. அக்கினிப்பிரவேசம், சுயதரிசனம், ஆடும் நாற்காலிகள் ஆடுகின்றன, அந்தரங்கம் புனிதமானது உள்பட ஜெயகாந்தனின் 17 சிறந்த சிறுகதைகளும், அவர் அளித்த பேட்டியும் இப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன. அனைவரையும் காந்தம்போல் கவர்ந்திழுக்கக்கூடிய புதுமையான புத்தகம். நன்றி: தினத்தந்தி, 6/8/14.
—-
தகவல் வழிகாட்டி, லட்சுமிவேல், ராஜாத்தி பதிப்பகம், சென்னை, விலை 50ரூ.
பட்டா, நிலப்பதிவு, பவர்ஆப் அட்டர்னி, அரசு அங்கீகார வீட்டுமனையை கண்டறிவது, போலி பத்திரத்தை அடையாளம் காண்பது முதலான விவரங்கள் கொண்ட புத்தகம். மிகவும் பயனுள்ளது. நன்றி: தினத்தந்தி, 20/8/2014.