முதல் விடுதலைப் போர்

முதல் விடுதலைப் போர், முனைவர் கே.ராஜய்யன், கர்னல் ஜேம்ஸ் வெல்ஸ், ஜே. கோர்லே, தமிழில் பொன்.சின்னத்தம்பி முருகேசன், நா. தர்மராஜன், பதிப்பாசிரியர் சின்னமருது தீனதயாளபாண்டியன், காவியன் பவுண்டேஷன், மதுரை, விலை 500ரூ.

ஐரோப்பிய மேலாதிக்கம் துடைத்தொழிக்கப்படப் போவதால், நாம் கண்ணிரற்ற நிலைத்த மகிழ்ச்சியில் திளைக்கப் போகிறோம் என்று 1801ம் ஆண்டு மருதுபாண்டியர்கள் பிரகடனம் செய்தார்கள். அதே ஆண்டு அவர்கள் தூக்கிலிடப்பட்டார்கள். ஆனால் 147 ஆண்டுகள் கழித்துத்தான் இந்திய மக்கள் சுதந்திரக் காற்றை சுவாசித்தார்கள். மருது பாண்டியருக்கு முன்பும் பின்பும் மரணித்த தியாகிகள் தொகை அதிகம். இந்தத் தரவுகளை வேறுபாடு பார்க்காமல் வெள்ளை வரலாற்று ஆசிரியர்கள் தங்களது ராணுவ ஆவணங்களில் எழுதி வைத்துப் போனார்கள். ஆனால் வட இந்திய வரலாற்று ஆசிரியர்கள் தங்களுக்குச் சாதகமாகத் திருத்தி எழுதிக்கொண்டார்கள். முனைவர் கே.ராஜய்யன், தென்னிந்திய வரலாற்று பேராயத்தின் தலைவராக இருந்து தமிழ்ப் பரப்பில் நடந்த போராட்டங்கள் அனைத்தையும் ஆங்கிலத்தில் கொண்டுவந்தார். இதுவே மற்ற வரலாற்று ஆசிரியர்களுக்கு கண் திறப்பாக இருந்தது. அதனுடைய தமிழாக்கமும் கர்னல் ஜேம்ஸ் வெல்ஸ், ஜே. கோர்லே ஆகியோர் எழுதியவற்றின் தமிழ் மொழிபெயர்ப்பு இணைந்த கனமான வரலாற்று ஆவணம் இது. பூலித்தேவனும் மருது பாண்டியர்களும் ஏதோ தங்கள் சீமையை மட்டும் காப்பற்றக் களம் இறங்கியவர்கள் அல்ல. ஒட்டுமொத்த இந்தியாவையும் ஜம்புத்தீபம் என்று அழைத்து அதனுடைய எதிர்கால நலனுக்காகத்தான் போராடினார்கள். இந்தப் போராட்டத்தைப் போல இந்தியாவின் வேறு எங்கும் அப்போது போராட்டங்கள் நடக்கவில்லை என்கிறது இந்தப் புத்தகம். 1799ம் ஆண்டு மே மாதம் 13ம் தேதி வருவாய்த்துறை ஆவணம் ஒன்றில், பொது எதிரியை வீழ்த்துவதற்கு ஒன்றுதிரள்கிறார்கள் என்று சொல்லப்பட்டு உள்ளது. இதனால் படைகளின் எண்ணிக்கையைக் குறைக்க முடியாது என்று சொல்கிறது இன்னொரு ஆவணம். அஞ்சா நெஞ்சனாக நடந்து கொண்ட கட்டபொம்மனின் தீரம் இதில் சொல்லப்படுகிறது. சினிமாவுக்காக கட்டபொம்மனை அதீதமாகக் காட்டிவிட்டார்கள் என்று சிலர் இன்னமும் சொல்லிவருகிறார்கள். தூக்குமேடைக்கு கட்டபொம்மனை அழைத்து வரும்போது எப்படி கம்பீரமாக வந்தார் என்பதை பிரிட்டிஷ் அதிகாரி பானர்மென் தன்னுடைய அறிக்கையில் அன்றைய தினம் பதிவு செய்து வைத்த குறிப்பு சுட்டிக்காட்டப்படுகிறது. உலகத்துக்கே இன்று ஜீவகாருண்யத்தை சொல்லிக்கொண்டு இருக்கும் பிரிட்டிஷ்காரர்கள் அன்று தமிழ் மண்ணில் எத்தகைய ரத்தக் களறிகளை ஏற்படுத்தினார்கள் என்பதைப் பக்கம் பக்கமாகப் படிக்க முடியும். அதனை எதிர்த்து எத்தகைய தீரத்துடன் தமிழ்த் தீரர்கள் போராடினார்கள் என்பதைப் படிக்க, பெருமையாகவும் கம்பீரமாகவும் இருக்கிறது. -புத்தகன். நன்றி: 10/8/2014.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *