தவறாமல் தரிசிக்க வேண்டிய கோவில்கள்
தவறாமல் தரிசிக்க வேண்டிய கோவில்கள், மு. ஆதவன், புதிய வாழ்வியல் பதிப்பகம், பக். 96, விலை 95ரூ.
ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு மனக்குறை இருக்கும். அவற்றை தீர்க்க வல்லவை கோவில்கள் மட்டுமே. வீதிக்கு ஒரு கோவில் இருந்தாலும், சில கோவில்கள், குறிப்பிட்ட பிரார்த்தனைகளை நிறைவேற்ற வல்லதாக இருக்கும். தலையெழுத்து நன்கு இருக்க, திருமணம் ஆக, குழந்தை பிறக்க, பிள்ளைகள் நன்கு படிக்க, அவர்கள் பேச்சாற்றலுடன் திகழ, வாய் பேசாதோர் சரியாகப் பேச, குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருக என 16 பிரார்த்தனைத் தலங்களை நமக்கு அறிமுகப்படுத்துகிறார் நூலாசிரியர் ஆதவன். தல வரலாறு மட்டுமின்றி, அங்கே என்ன விசேஷம், எப்போது போக வேண்டும், திருவிழாக்கள் என்ன, தொடர்பு எண், போக்குவரத்து வசதி என, சகல தகவல்களையும் உள்ளடக்கி, படங்களுடன் வெளியிட்டிருப்பது சிறப்பு. எல்லாரது வீடுகளிலும் அவசியம் இருக்க வேண்டிய நூல் இது. -ம. வான்மதி. நன்றி: தினமலர், 15/6/2014.
—-
இசையின் சித்திரங்கள் எம்.எஸ். சுப்புலட்சுமி, லட்சுமி தேவ்நாத், பத்மா நாராயணன், ஹெரிடேஜ் பப்ளிஷிங் ஹவுஸ், பக். 24, விலை 72 ரூ.
இசை பேரரசி எம்.எஸ். சுப்புலட்சுமியின் வரலாற்றை ஓவிய வடிவில் சித்தரிக்கிறது இந்த நூல். கர்நாடக சங்கீத ஆராய்ச்சியாளர், லட்சுமி தேவ்நாத், இசை பேரறிஞர்களின் வரலாற்றை, ஓவியங்களாக, புத்தக வடிவில் வெளியிட்டு வருகிறார். அவர் வெளியிட்டுள்ள நான்கு நூல்களில் இதுவும் ஒன்று. மிக எளிய நடையில் தேவையான கருத்துக்களுடன் ஒவ்வொரு ஓவியமும் அமைந்துள்ளது. ஒவ்வொரு இசை கலைஞரின் பெயர் வரும் போதும், கீழே அவரது, கால கட்டத்தையும் குறிப்பிட்டுள்ளத சிறப்பு. எம்.எஸ்.சுப்புலட்சுமியின், குழந்தைப் பருவம் முதல் அவரது மறைவு வரை, அனைத்தையும் ரத்தின சுருக்கமாக ஓவியங்களில் கொடுத்திருப்பதன் மூலம் குழந்தைகள், சிறுவர்களுக்கு அவரது வாழ்க்கை வரலாற்றை எளிமையாக எடுத்துரைப்பதில், ஆசிரியர் வெற்றி பெற்றிருக்கிறார். நன்றி: தினமலர், 15/6/2014.