திருக்குறள் யாப்பிலக்கண நோக்கில்
திருக்குறள் யாப்பிலக்கண நோக்கில் செம்பதிப்பு, க. கலியபெருமாள், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை, பக். 492, விலை 370ரூ.
உலகப் பொது மறையான திருக்குறள் குறித்து இதுவரை பல்வகை நோக்கிலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுவிட்டன. ஆயினும் யாப்பிலக்கண நோக்கில் திருக்குறளை இதுவரை எவரும் ஆய்வு செய்திலர். அப்பெரும் பணியை இந்நூலாசிரியர் மேற்கொண்டிருக்கிறார். பரிமேலழகர், தேநேயப் பாவாணர், மு. வரதராசனார், வித்துவான், ச. தண்டபாணி, தேசிகர், வ.சுப. மாணிக்கம் போன்ற தமிழறிஞர்களின் கருத்து விளக்கங்களை அடியொற்றி இந்நூல் எழுதப்பட்டுள்ளது. ஒவ்வொரு குறளையும் எழுத்து, அசை, சீர், தளை என்னும் வகையில் எடுத்துக்கொண்டு யாப்பிலக்கண நோக்கில் ஆய்வு செய்துள்ளார். அவற்றுள் எட்டு குறட்பாக்களில் யாப்பிலக்கணப் பிழைகள் உள்ளனவென்பதைக் கண்டறிந்து விளக்கியிருக்கிறார். அப்பிழைகளும் அது அஃது என்னும் இரு சொற்களுக்கிடையில் நிகழ்ந்துள்ளன. ஏற்கெனவே பரிமேலழகர் ஒரு குறளை மட்டும் (257) எடுத்துக்காட்டி வழுவமைதி கூறியிருந்தாலும் தேவநேயப் பாவாணர் ஐந்து குறள்வெண்பாக்கள் பிழைபடவுள்ளன என்று கூறியிருந்தாலும் இந்நுலாசிரியர் வகையுளி நோக்கிலும், பொருள் நோக்கிலும் இரு வகையாக வகுத்து ஆய்ந்திருப்பதால் திருக்குறள் ஆய்வில் அடுத்த கட்டத்தை இவர் எட்டியிருக்கிறார் எனலாம். நூலாசிரியர், தனது தரப்புக்கான தரவுகளைத் தெளிவாக முன்வைத்திருக்கிறார். தமிழின் ஆழ அகலங்களை நன்கறிந்த ஒருவரே இத்தகைய முயற்சியை மேற்கொண்டிருக்க இயலும். பேசாப் பொருளைப் பேசத் துணிந்திருக்கிறார் இந்நூலாசிரியர். தமிழறிஞர்களிடத்தும், திருக்குறள் ஆர்வலர்களிடத்தும் இந்நூலின் கருத்துகள் ஓர் ஆரோக்கியமான விவாதத்தைத் தோற்றுவித்தால் திருக்குறள் குறித்த ஒரு புதிய கருதுகோல் உருவாக அது வாய்ப்பாக அமையும். அவ்விவாதத்தின் தேவை, திருக்குறளில் யாப்பிலக்கணப் பிழைகள் உள்ளன என்று தமிழுலகம் ஏற்பதற்காக மட்டுமன்று. அப்படி எதுவும் இல்லை என்று நிறுவுவதற்காகவும்தான். நன்றி: தினமணி, 15/9/2014.