நஞ்சுண்டகாடு
நஞ்சுண்டகாடு, குணா கவியழகன், அகல் வெளியீடு, சென்னை, விலை 135ரூ.
உள்ளேயிருந்து ஒரு குரல் இலங்கையில் நடந்த போரில் இணைந்துகொண்ட தமிழ் இளைஞர்கள் அதற்காகக் கொடுத்த விலையின் மதிப்பு என்னவென்பதை விரிவாகச் சொல்லி அது சரிதானா என்ற கேள்வியையும் எழுப்புகிறது குணா கவியழகனின் நஞ்சுண்ட காடு என்ற நாவல். பத்தாண்டுகளுக்கு முன்பே எழுதப்பட்டுவிட்ட இந்நாவல் விடுதலைப்புலிகளின் அனுமதி மறுப்பு, அதன்பின்பு ஆசிரியரின் முள்வேலி முகாம் வாழ்க்கை ஆகியவற்றால் தடைப்பட்டுத் தற்போதுதான் அச்சேறியிருக்கிறது. காட்டு முகாமில் பயிற்சியில் ஈடுபடும் இளைஞர்களைப் பற்றிய விவரிப்பே இந்நாவல். கடுமையான பயிற்சியும், கடுமையான தண்டனைகளும் அவர்களில் சிலரை முகாமைவிட்டே ஓடச் செய்கின்றன. எனினும் அந்த இளைஞர்கள் தாங்கள் ஏற்றுக்கொண்ட லட்சியத்திற்காக வதைபடவும் தயாராகத்தான் இருக்கிறார்கள். மக்களால் அன்போடு பொடியள் என்று அழைக்கப்படும் நாளுக்காக அவர்கள் எந்த வலியையும் அனுபவிக்கத் தயாராகவே இருக்கிறார்கள். அவர்களில் ஒருவனாகப் பயிற்சி பெற்றுத் திரும்பும் இனியவன் தனது நினைவுகளைச் சொல்லிச் செல்வதாக அமைந்திருக்கிறது இந்த நாவல். பயிற்சி முகாமில் எல்லோருக்கும் அன்பையும் ஆறுதலையும் வழங்குபவனாக சுகுமார் இருக்கிறான். குடும்பத்தின் அத்தனை வயிறுகளும் அவனை நம்பியிருக்க தனது குடும்பக் கடமையை உதறிவிட்டுக் களத்தில் கடமையாற்ற வருகிறான் அவன். இரவு நேரத்தின் போது சுகுமாருக்கும் இனியவனுக்கும் இடையே நிகழும் உரையாடலை மனித வாழ்க்கையின் மீது எழுப்பும் தத்துவார்த்த கேள்விகளாகவே அமைத்திருக்கிறார் குணா கவியழகன். சுகுமாரை அடுத்து அவன் தம்பிகளும் அடுத்தடுத்து இயக்கத்தில் வந்து இணைந்து கொள்கிறார்கள். பெற்ற பிள்ளைகள் எல்லாம் இயக்கத்தில் சேந்துவிட இறுதிச்சடங்குக்கு வழியின்றி இயக்க உதவியை எதிர்பார்த்துக் கிடக்கின்றன பெற்றோரின் பிணங்கள். வாழ்வின் மிக எளிய கனவுகளும்கூட சாம்பலாசிக் காற்றில் பறக்க நிர்க்கதியாக நிற்கும் சுகுமாரின் அக்கா இந்த நாவல் எழுப்பும் கேள்வியாகவே மாறி நிற்கிறாள். ஈழப்போரில் அனைத்தையும் இழந்து நிற்கும் எண்ணிறந்த பெண்களின் ஒரு குறியீடாக இருக்கிறாள் அவள். விடுதலைக்குத் தக்க விலைதான் கொடுக்க வேண்டும். அதற்குமேல் கொடுக்க நேர்ந்தால் தோற்றுவிட்டதாகத்தான் அர்த்தம் என்று சுகுமார் இனியவனுக்கு எழுதியிருக்கும் கடிதத்தின் வரிகள்தான் இந்த நாவல் சுட்டிக்காட்டும் முக்கியப் புள்ளியாகப்படுகிறது. நன்றி:தி இந்து, 13/9/2014.