பொக்கிஷம்
பொக்கிஷம், ப்ரியா கல்யாணராமன், குமுதம் பு(து)த்தகம், சென்னை, பக். 96, விலை 70ரூ.
To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-292-1.html ஐம்பெரும் காப்பியங்களில் வளையாபதி, குண்டலகேசி நமக்கு முழுமையாக கிடைக்கவில்லை. பெயரளவில்தான் அதை அடுத்தடுத்த தலைமுறையினருக்கு சொல்லிவைக்கிறார்கள். அதேபோன்று அரிசந்திர புராணம், நளவெண்பா, குசேலோபாக்கியானம், மணிமேகலை, சிவபுராணம், திருவாசகம் போன்ற பழந்தமிழ் புராணக் காப்பியங்களை எடுத்துப்படிக்க யாவரும் முன்வருவதில்லை. காரணம் நேரமின்மையும் அதன் கடுமையான நடையுமே. அத்தகைய இலக்கியங்களை அதன் சாரம் மாறாமல், எளிமையாக சுருக்கிச் சொல்லி விளங்க வைக்கும் முயற்சிதான் பொக்கிஷம் நூலின் நோக்கம். இதனால் வாசகர்களுக்கு இந்நூல்கள் பற்றிய பட்டறிவும், இந்நூலைத் தேடிப் படிக்க வேண்டும் என்ற அவாவையும் ஏற்படுத்தியுள்ளார் நூலாசிரியர் ப்ரியா கல்யாணராமன். குண்டலகேசி தன்னைக் கொல்லவந்த கணவனைக் கொன்று பௌத்தத் துறவியானது, வளையாபதிக்கு தன் மகனை காளிதேவி அடையாளம் காட்டியது என்று காப்பியங்களின் கதைகளை சுவையாகத் தந்து படிக்க வைக்கிறார் நூலாசிரியர். -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 3/9/2014.
—-
முதுமையை வெல்வோம், பத்மஸ்ரீ டாக்டர் வ.செ. நடராசன், வெற்றி நலவாழ்வு மையம், பக். 96, விலை 100ரூ.
முதுமைப் பருவம் என்பது கடவுள் கொடுத்த வரம். இந்தப் பருவத்தில் வரும் தொல்லைகளை வைத்தே, பலர் முதுமையை வெறுக்கிறார்கள். ஆனால் அந்த முதுமையை வென்று காட்ட பல எளிய வழிகளை சொல்லித் தருகிறார் டாக்டர் நடராசன். உடல்வலி, மூட்டுவலி, உள்ளிட்ட நோய்களை எப்படி விரட்டுவது என்பது முதியவர்களுக்கு உணரவைக்கும் நூல். எப்போது தூங்க வேண்டும்? எதை எவ்வளவு சாப்பிட வேண்டும்? மருந்துகளை எப்படி கையாள வேண்டும்? உடற்பயிற்சி, நடைப்பயிற்சி இந்தக்காலத்தில் எப்படி இருக்க வேண்டும்? மறதியை எப்படி போக்குவது? மனதளவில் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? நோய்களைக் கண்டு வருந்தாமல் எப்படி எதிர்கொள்வது?நட்பு முதுமைக்கு எவ்வளவு முக்கியம்? முதுமையிலும் சொந்தக்காலில் நிற்பது எப்படி? என்று பல வழிமுறைகளைச் சொல்லி, முதுமையை வெல்ல உதவும் நூல். -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 3/9/2014.