ஆரோக்கியமான கர்ப்பத்திற்கு ஒரு வழிகாட்டி

ஆரோக்கியமான கர்ப்பத்திற்கு ஒரு வழிகாட்டி, டாக்டர் கீதா அர்ஜுன், ஹேமா நரசிம்மன், திருமகள் நிலையம், பக். 336, விலை 350ரூ.

கர்ப்பத்தை ஒரு தாய் உணர்வது எப்படி? மகப்பேறு அடைவது, சாதாரண விஷயம் அல்ல. இப்போதெல்லாம், காற்று மாசு, மன அழுத்தம் உட்பட பல காரணங்களால், கர்ப்பம் தரிப்பதே தாமதமாகிறது என்று கூறப்படுகிறது. அதையெல்லாம் தாண்டி, கர்ப்பம் தரித்தால், அந்த சிசுவை வயிற்றில் பத்திரமாகப் பாதுகாத்து வெளிக்கொணர்வது, மறு ஜென்மம் எடுப்பதற்கு ஒப்பாகிவிடுகிறது. இதனால் கர்ப்பம் தரிக்கும் ஒரு பெண், பல கட்டப் போராட்டத்திற்கும், கவலைக்கும் உள்ளாகிறாள். சாமானிய கர்ப்பிணிப் பெண்ணுக்கு ஏற்படும் மனப் போராட்டங்களையும், பதற்றத்தையும் தணிக்க வேண்டும் என்ற உந்துதல், இந்தப் புத்தகத்தை எழுதிய ஆசிரியருக்கு ஏற்பட்டுள்ளது போலும். தான் எதிர்கொண்ட, சிகிச்சை செய்த பல பெண்களின் அனுபவங்களை வைத்து, ஒரு கர்ப்பிணிக்கு எந்தெந்த சந்தேகங்கள் எழலாம் என்பதை அனுமானித்து, அனைத்திற்கும் விடை தந்திருக்கிறார். பெரும்பாலான பெண்கள், மாதத்தில், எந்த தேதியில், எத்தனை நாட்களில் தனக்கு மாதவிடாய் துவங்கி நிற்கிறது என்பதை கவனிப்பதில் கூட, அக்கறை செலுத்துவதில்லை. மாதவிடாயின் தன்மை எத்தகையதாக இருக்கிறது என்பதை, கவனிப்பதிலும் அக்கறை செலுத்துவதில்லை. ஆனால் இவற்றில் கவனம் செலுத்த வேண்டும் என்ற பொறுப்பை, டாக்டர் கீதா அர்ஜுன் எடுத்துரைக்கிறார். மாதவிடாய் சுழற்சியை எப்படி கணக்கிடுவது என்பது முதல் அனைத்தையும் சொல்கிறார். கருத்தரிக்க என்ன செய்ய வேண்டும், அதற்கான ஆலோசனையின் அவசியம், கரு உருவானதன் அறிகுறியை ஒரு தாய் உணர்வது எப்படி, கரு எப்படி உருவாகிறது, கருவின் வளர்ச்சி நிலை, அதற்குத் தேவையான ஊட்டச் சத்து, மகப்பேறு மருத்துவர் பரிந்துரைக்கும் மாத்திரைகளின் தன்மை என்ன, அவற்றை ஏன் உட்கொள்ள வேண்டும், கருவைப் பராமரிப்பதில் தாயின் கடமை, தந்தையின் கடமை, மகப்பேறின் போது மேற்கொள்ள வேண்டிய கவனங்கள், பயத்தைத் தெளிவிப்பது எப்படி, குழந்தை பெற்ற பின் ஏற்படும் மன அழுத்தங்கள், குழப்பங்களை எதிர்கொள்வது எப்படி போன்ற பல கேள்விகளுக்கு பதில் சொல்லி இருக்கிறார். மூட நம்பிக்கைகளால் ஏற்படும் குழப்பங்களையும், அதற்கான தெளிவையும் எடுத்துரைத்தாள். திருமணமாகப் போகும் பெண்களும், மகப்பேறு அடைந்துள்ள பெண்களும் படிக்க வேண்டிய புத்தகம் இது. -மீனாகுமார். நன்றி: தினமலர்,6/10/2014.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *