I am a born liar
I am a born liar, ஹாரி என் ஆப்ரகாம்.
கலைஞனுக்கு தனிப்பட்ட வாழ்க்கை இல்லை இத்தாலிய இயக்குனர் பெட்ரிக் பிலனியின், வாழ்க்கை வரலாற்றைக் கூறும், I am a born liar என்ற நூலை அண்மையில் படித்தேன். ஹாரி என் ஆப்ரகாம் நிறுவனம், இந்நூலை வெளியிட்டுள்ளது. கடந்த நூற்றாண்டில் உலகம் போற்றிய இயக்குனர்களில், பெட்ரிக் பிலனி முக்கிய மாணவர், ஓவியர், கவிஞர், சினிமா இயக்குனர் என, பன்முகத் தன்மை கொண்டவர். அவரின் வாழ்க்கை வரலாற்று நூலில், அவர் எப்படி சினிமா எடுத்தார். அதற்கான தயாரிப்புகளை எப்படி செய்தார். தன் கதாநாயகன், நாயகியை எப்படி தேர்வு செய்தார். அவர்களுக்கு, எப்படி பயிற்சி அளித்தார் என்பதோடு, அவரது ஓவியங்கள், கவிதை மற்றும் அவரது பேட்டி ஆகியன இடம் பெற்றுள்ளன. பொதுவாக, ஒரு கலைஞனின் வாழ்க்கையும், அவர் செய்யும் வேலையும் வேறு வேறானவை என கூறுகின்றனர். ஆனால் மாபெரும் படைப்பாளியான பிலனி, வாழ்க்கையும், தான் செய்யும் வேலையும் ஒன்றுதான். இவ்விரண்டையும் பிரித்து பார்க்க முடியாது என்கிறார். அவரது வாழ்க்கையும், அதுபோலவே அமைந்துள்ளது. தான் எடுக்கும் படத்தின் கதையையும், அதன் முக்கிய கதாபாத்திரங்கள், நிகழ்வுகளை, தனக்கு தோன்றும் போதெல்லாம் குறித்து வைத்துக் கொள்கிறார். இந்த குறிப்புகள், எழுத்துக்காளகவும், ஓவியங்களாகவும் பதியப்பட்டு உள்ளன. இதன்பின் கதைக்கான நடிகர்களை தேர்வு செய்கிறார். சில நேரங்களில், புதியவர்களையும் தேர்வு செய்துள்ளார். அவர்கள் புதிதாக செய்து காட்டுவதையும் ஏற்றுக்கொள்கிறார். பிலனியின் வாழ்க்கையில், அனைத்தும் யதார்த்தமாகவே நிகழ்ந்துள்ளன. சில அதீத கற்பனைகளும், யதார்த்தத்துடன் கைகோர்க்கவும் செய்கின்றன. அது அவர் வாழ்க்கையின் வெற்றியாக அமைகிறது. ஆனால் கலைஞர் என்பவன் எதை சித்திக்கிறானோ, எதை செய்ய முயற்சிக்கிறானோ, அது அவனுடைய வாழ்க்கை. இதில் தனிப்பட்ட வாழ்க்கை என்பது ஒன்றுமில்லை. அனைத்தும், அன்றாட வாழ்வோடு இணைந்ததே என்பதை, கடந்த நூற்றாண்டில் போற்றப்பட்ட படைப்பாளி பெட்ரிக் பிலனியின் வாழ்க்கை வரலாறு உணர்த்துகிறது. -மருது, ஓவியர். நன்றி: தினமலர்,6/10/2014.