என் சரித்திரம்
என் சரித்திரம், டாக்டர். உ.வே. சாமிநாத ஐயர், விகடன் பிரசுரம், சென்னை -2, விலை 275ரூ.
To buy this Tamil book online : https://www.nhm.in/shop/100-00-0000-808-2.html 21ம் நூற்றாண்டிற்கும் 19ம் நூற்றாண்டிற்கும் எழுத்து பாலம் போடும் உ.வே.சா. தமிழ் தாத்தா உ.வே.சா. சாமிநாதய்யர் எழுதிய என் சரித்திரம் என்ற புத்தகத்தை சமீபத்தில் படித்தேன். 21ம் நூற்றாண்டிற்கும், 19ம் நூற்றாண்டிற்கும் எழுத்து பாலம் போடுகிற அவர் எழுதிய அந்த புத்தகத்தில், 19ம் நூற்றாண்டில் தமிழகம், அங்கே வாழ்ந்த தமிழ் மக்கள், அவர்களுடைய உணவு பழக்கம், கோபதாபங்கள், படிப்பு, எழுத்து, மதம், நம்பிக்கைகள், விழாக்கள், கொண்டாட்டங்கள் என ஒரு காலக்கட்டத்தினுடைய விரிவான, சுவையான பதிவுகள் இடம் பெற்றுள்ளன. கதையல்லாத வாழ்க்கை வரலாற்று நூல், நம்மை இக்காலத்தை விட்டு, பழங்காலத்திற்கு கடத்துவதுடன், நம்முடைய விழுமியங்களையும், பழமையையும், கலாசாரத்தையும், மொழியையும், எப்படி பாதுகாக்க வேண்டும் என்பதை, தமிழ் தாத்தா தன்னுடைய அனுபவத்தில் இருந்து, மிகவும் எளிய சொற்களில் சுவையாக சொல்கிறார். 800 பக்கம் கொண்ட இந்த நூலை படிப்பது கடினமாகவே தோன்றாது. இந்த புத்தகத்தில் எனக்கு பிடித்த பகுதி, உ.வே.சா. சங்க இலக்கியமான நற்றிணையின் ஏட்டு சுவடிகளை தேடி, நெல்லை மாவட்டத்தில் அலைந்து திரிகிறார். அவரிடம் கிட்டத்தட்ட, முழு நூலின் சுவடிகளுமே கையில் இருந்தது என்றாலும், அதில் மூன்று மலர்களை பற்றிய ஒரு சிறிய பகுதி விட்டுப் போயிருந்தது. அதற்காக அவர், நெல்லை மாவட்டத்தில் கவிராயர் குடும்பங்களில், பரணில் வைக்கப்பட்ட ஓலைச் சுவடிகளை வேண்டி, மன்றாடிக் கேட்டுக் கொண்டிருந்தார். ஒரு இரவில் யாரோ, அவர் இருந்த இடத்திற்கு வந்து, இந்த ஓலைச்சுவடி உங்களுக்கு பயன்படுமா பாருங்கள் என்று கொடுத்தனர். கோவில் உற்சவமூர்த்தி, திருஉலா சென்ற நேரம் அது. அந்த விளக்குகளின் ஒளியில் உ.வே.சா. தன் கையில் கிடைத்த சுவடியை பிரித்து பார்க்கிறார். என்ன ஆச்சரியம்? அவர் பிரித்த ஓலைச் சுவடியில், தான் தேடி தேடி அலைந்து கொண்டிருந்தாரே, அந்த மலர்களை பற்றிய மூன்று வரிகளும் அப்படியே உறைந்திருக்கின்றன. அந்த உதிர்ந்த மலர்களை மறுபடியும் கண்ட அவருடைய உற்சாகம், படிக்கிற நம்மையும் தொற்றிக் கொள்ளும். தமிழகத்தில் உள்ள ஒவ்வொருவரும் வாழ்வில் ஒருமுறையாவது, உ.வே.சா. எழுதிய என் சரித்திரம் புத்தகத்தை படிக்க வேண்டும். -இரா. முருகன், எழுத்தாளர். நன்றி: தினமலர், 9/11/2014.