நான் வந்த பாதை

நான் வந்த பாதை, எஸ்.எஸ்.ராஜேந்திரன், அகநி வெளியீடு, வந்தவாசி, விலை 500ரூ.

To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-356-3.html தம்பி ராஜேந்திரன் அரைக்கால் சட்டைப் போட்டிருந்த காலத்திலேயே எனது சுட்டுவிரலைப் பிடித்துக்கொண்டு அரசியலுக்கு வந்தவன். தம்பி ராஜேந்திரன் கழகத்தால் வளர்ந்தவன் அல்ல. இந்தக் கழகத்தை வளர்ப்பதற்காகத் தன்னையே ஒப்படைத்துவிட்டவன். தமிழகத்தில் ஏன் உலகத்திலேயே ஒரு நடிகர் தேர்தலில் நின்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார் என்ற பெருமையும் தம்பிக்கு உண்டு என்றார் அறிஞர் அண்ணா. தனது கனிந்த முகத்தால், கணீர் குரலால், காந்தச் சிரிப்பால், பல்திற நடிப்பால்… திரைத்துறைக்கு வந்து வளர்ந்து, திராவிட இயக்கப் பற்றால், கொள்கை ஈர்ப்பால் அந்த இயக்கத்துக்குள் தன்னை இணைத்துக்கொண்டு இறுதி வரையும் சொந்தக் கருத்தை யாருக்கும் பயப்படாமல் சொல்லி வந்த எஸ்.எஸ்.ஆரின் வாழ்க்கை வரலாறு இது. அவ்வை ஷண்முகம் நாடகக் குழுவில் இருந்துதான் எஸ்.எஸ். ராஜேந்திரனின் கலைப்பயணம் தொடங்கியது. சிறு வேடங்களில்தான் அவர் நடித்தும் வந்தார். ஒருநாள் அவ்வை ஷண்முகத்திடம்போய், தனக்கு பெரிய வேடம் வேண்டும் என்று துணிச்சலாகக் கேட்டுள்ளார். சிவலீலா நாடகத்தில் அவ்வை ஷண்முகம் போடக்கூடிய செண்பகப்பாண்டியன் வேடமே தனக்கு வேண்டும் என்றும் இவர் கேட்டுள்ளார். உடனே ஒத்திகை பார்த்து அவர் கேட்ட செண்பகப்பாண்டியன் வேடத்தையே கொடுத்துள்ளார் ஷண்முகம். விரைவில் முன்னேறுவதற்கான எல்லா அம்சங்களும் உன்னிடம் உள்ளன என்று அவர் அன்று சொன்னது பலித்தது. அதாவது தனக்கு உரிமையானதைக் கேட்டுப் பெறும் இயல்பு அவருக்கு இளமையிலேயே இருந்தது. அதுதான் அவரை கலையுலகம் தாண்டி அரசியல் பக்கமாகவும் தள்ளியது. நான் சிறுவயதிலிருந்தே பெரியார் தொண்டன். அண்ணாவின் தம்பி. சாதி, மதத்தில் நம்பிக்கை இல்லாதவன். ஆகவே எனது கொள்கைக்கு விரோதமான புராணப் படங்களில் நடிப்பதில்லை என்று முடிவெடுத்து அதன்படியே இதுவரை லட்சியத்தோடு வாழ்ந்து வருகிறேன். அதனால் இன்றைய கணக்குப்படி பல கோடி ரூபாய் நான் நஷ்டப்பட்டிருக்கிறேன். கழகத்துக்காகத் தன் பணத்தைச் செலவு செய்தவன் எனப் பெயர் பெற்றிருக்கிறேன். கழகத்துக்காக எத்தனையோ இழப்புகளை ஏற்றுக்கொண்டவன் என எல்லா கட்சியினரும் ஏற்றுக்கொள்கிற அளவுக்கும் வாழ்ந்து கெண்டிருக்கிறேன் என்று எஸ்.எஸ்.ஆர் எழுதி இருக்கிறார். அதற்கான முழு ஆதாரங்களும் இந்தப் புத்தகத்தில் இருக்கின்றன. அவர் தனது வரலாற்றை முழுமையாக எழுதி உள்ளார். ஆனால் அதில் பாதி அளவு கையெழுத்து பிரதியாக இருக்கும் போதே காணாமல் போயிருக்கிறது. 600 தலைப்புகளில் அவர் எழுதியதில் 305 தலைப்புகளில் உள்ளவை மட்டுமே இப்போது தொகுக்கப்பட்டுள்ளன. அந்தப் பக்கங்களும் திரட்டப்படுமானால், அது அரைநூற்றாண்டு கலை, அரசியல் வரலாறாகவே அமைந்துவிடும்.

நன்றி: ஜுனியர் விகடன், 28/12/2014.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *