யாழ்ப்பாண அகராதி

யாழ்ப்பாண அகராதி, சந்திரசேகரப் பண்டிதர், சரவணமுத்துப் பிள்ளை, தமிழ்மண் பதிப்பகம், சென்னை, விலை 1240ரூ. (இரண்டு தொகுதிகளும்).

கல்தோன்றி மண்தோன்றா காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்தகுடி பேசிய தமிழ் மொழியின் தொன்மையும் பழைமையும் யாராலும் இன்னும் முழுமையாகக் கணிக்க முடியாதது. கற்காலம் முதல் இன்றைய கணினி காலம் வரையிலும் தன் தனித்தன்மை மாறாமல் உயிரைத் தக்கவைத்து உணர்வுபூர்வமாகவும் வளர்ந்தும் வலம் வந்தும் வருகிறது தமிழ்மொழி. அந்த மொழியின் வளத்தை அறிய வேண்டுமானால், அகராதிகள்தான் அதற்கும் வழிவகுக்கும். கடந்த 18ம் நூற்றாண்டில் இத்தாலியில் இருந்து சமயப் பரப்புரைக்காக வந்த வீரமாமுனிவர் முதன்முதலாகத் தமிழ் அகராதியை உருவாக்கினார். இதற்கு சதுரகராதி என்று பெயர். 1824ம் ஆண்டு இது அச்சில் வந்தது. அதற்கு 18 ஆண்டுகள் கழித்து இலங்கையில் இருந்து ஓர் அகராதி வெளியானது. இதற்கு மானிப்பாய் அகராதி என்று பெயர். யாழ்பாணத்தைச் சேர்ந்த மானிப்பாய் என்ற ஊரில் அச்சிடப்பட்டதால் அந்தப் பெயர் வந்தது. பின்னர் இது யாழ்ப்பாணம் அகராதி எனப்பட்டது. இந்த அகராதியை சந்திரசேகரப் பண்டிதரும் சரவணமுத்துப் பிள்ளையும் தயாரித்தார்கள். ஈழம், தமிழுக்குத் தந்த தமிழ்க்கொடை இது. இதனை மீண்டும் பதிப்பித்துள்ளார் தமிழ்மண் இளவழகனார். வீரமாமுனிவரின் சதுரகராதியைவிட யாழ்ப்பாணம் அகராதி நான்கு மடங்கு பெரியது. மொத்தம் 58000க்கும் மேற்பட்ட தமிழ்ச்சொற்கள் இதில் உள்ளன. யாழ்ப்பாணம் அமெரிக்கன் அச்சகம் இதனை முதலில் வெளியிட்டபோது, கிறிஸ்துவ மறை நூற்களை தமிழில் படிப்பவர்களுக்கு வாய்ப்பாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் வெளியிட்டார்கள். அதன்பிறகு தமிழர்கள் அனைவருக்குமான களஞ்சியமாக யாழ்ப்பாணம் அகராதி மாறியது. வடமொழி ஆதிக்கம் மேலோங்கி இருந்த அந்தக் காலத்தில் தமிழில் பெரும்பாலும் வடசொற்கள் கலந்து எழுதும் வழக்கம் இருந்தது. இத்தகைய சூழ்நிலையில் தயாரான அகராதி என்பதால் குழப்பமான பல சொற்றகளுக்குப் பொருள் புரிந்துகொள்ள இந்த அகராதி உதவுகிறது. 200 ஆண்டுகளுக்கு முன் பயன்பாட்டில் இருந்த சொற்களையும் அதன் பொருளையும் அறிந்துகொள்ள முடிகிறது. அகராதி என்பது கற்பார்க்குத் துணை நின்று உரிய பொருள் தெரிந்துகொள்ள வழிவகுப்பது, கல்வி கற்பிக்கும் ஆசிரியரின் நிலையில் உள்ளது. ஆசிரியரிடம் நேரில் மாணவர் கல்வியின் பயனைப் பெறுவதுபோல அகராதியின் துணையால் அறிவு விளக்கம் பெறலாம் என்கிறார் பதிப்பாளர். உண்மையில் இந்த இரண்டு தொகுதிகளும் பெரும் தமிழ் ஆசான்கள்தான். -புத்தகன். நன்றி: ஜுனியர் விகடன், 24/12/2014.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *