அஷ்டாவக்ர மகாகீதை
அஷ்டாவக்ர மகாகீதை, ஓஷோ, தமிழில் என். ஸ்ரீதரன், கவிதா பப்ளிகேஷன்ஸ், சென்னை, பக். 448, விலை 350ரூ.
அஷ்டாவக்ர ஸம்ஹிதாவின் 298 சூத்திரங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முப்பது சூத்திரங்கள் சார்ந்து ஓஷோ நிகழ்த்திய சொற்பொழிவுகளின் தொகுப்பே இந்நூல். வடமொழி ஸ்லோகங்கள், அவற்றுக்கான விளக்கங்கள், முல்லா நசுருதீன் கதைகள், ஜென் கதைகள், சூஃபி மார்க்க கதைகள், பைபிள் கதைகள், திபேத்திய பழங்குடியினர் கதைகள், மகாபாரதக் கதைகள், நாட்டுப்புறக் கதைகள், புத்தர், விவேகானந்தர் போன்றோரின் வாழ்வில் நிகழ்ந்த சம்பவங்கள், தனக்கே நேரிட்ட அனுபவங்கள் – இப்படி எல்லாவற்றையும் மேற்கோள் காட்டி நேரிய வாழ்க்கைக்குத் தேவையான பல அரிய, அற்புதச் செய்திகளைத் தெளிவாகவும் சுவையாகவும் கூறியிருக்கிறார் ஓஷோ. பல பகுதிகள் கேள்வி-பதில் வடிவில் இருப்பதால் படிப்பதற்கு எளிதாக இருக்கிறது. ஞானம், தியாகம், சமயம், துறவு, கடவுள் இப்படி எல்லாவற்றையும் பற்றி அழுத்தமாகவும் ஆழமாகவும் அருமையான பல கருத்துகளை முன்வைக்கிறார். ‘நாம் அனைவரும் ஒரே உலகத்தில் வசிப்பதில்லை. எத்தனை மனிதர்களோ அத்தனை உலகங்கள் உள்ளன’, ‘நீ யாருக்காவது எதையாவது கொடுத்து நன்றி என்ற சொல்லை எதிர்பார்த்தால்கூட உன் தானம் களங்கப்பட்டுவிடும்’, ‘தோல்வி ஏற்படலாம் ஆனால் பின்வாங்காதே’ இப்படி ஏராளமான சிறு சிறு தத்துவ முத்துக்கள் பக்கத்துக்குப் பக்கம் நிறைந்தருக்கின்றன. வாழ்க்கை குறித்த நம்பிக்கையையும் சக மனிதர்கள் மீதான நேசத்தையும் இந்நூலிலுள்ள ஓஷோவின் சொற்பொழிவுகள் அதிகரிக்கின்றன. நன்றி: தினமணி, 19/1/2015.