நாகசாமி முதல் (பிரபலங்களின் நேர்காணல்கள்)
நாகசாமி முதல் (பிரபலங்களின் நேர்காணல்கள்), ராம்குமார், கண்மணி கிரியேட்டிவ் வேவ்ஸ், சென்னை, பக். 360, விலை 225ரூ.
தொல்லியல் ஆராய்ச்சியாளர் நாகசாமி, தினமணி முன்னாள் ஆசிரியர் ஐராவதம் மகாதேவன், கிருபானந்தவாரியார், தமிழ் அறிஞர் அ.ச. ஞானசம்பந்தன் உள்ளிட்ட அறுபதுக்கும் மேற்பட்ட பிரபலங்களின் நேர்காணல்களைக் கொண்ட புத்தகம் இது. தண்ணீர் இல்லாமல் குழம்பு வைப்பதற்கான செய்முறையைக் கிருபானந்தவாரியார் சொல்லித் தருகிறார்.‘பச்சைக் குழந்தை அலங்காரத்தை விரும்புவதில்லை. தாய் அக்குழந்தையின் மீதுள்ள அன்பினால் அலங்காரம் பண்ணிப் பார்க்கிறாள். அதுபோலத்தான் கடவுளுக்க நாம் பால் போன்றவற்றைக் கொட்டி அபிஷேகங்களைச் செய்கிறோம்’ என்ற வாரியார் விளக்கம் சுவை. தமிழகத் தொல்லியல் துறையில் பல பிரிவுகளை உருவாக்கி அதன் வளர்ச்சிக்கு உதவியது. தமிழக அருங்காட்சியத்தில் முதலில் தமிழ் துணை நூல்களைப் பதிப்பித்தது, மாமல்லபுரத்தை உருவாக்கியது யார் என நிரூபித்தது உள்ளிட்ட பல அரிய சாதனைகளைப் படைத்த நாகசாமி பேட்டி சுவையானது. தமிழறிஞர் அ.ச.ஞானசம்பந்தனின் நேர்காணல் பல அரிய தகவல்களைத் தருகின்றது. சாதனை படைத்த பதிப்பாளர்களான சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிப்கோ, அல்லயன்ஸ் ஆகியவற்றின் பின்னணியில் உள்ளவர்களின் நேர்காணல்கள் பதிப்புலக வரலாற்றை மட்டுமல்லாமல், புதிய செய்திகளையும் கொண்டுள்ளன. பொழுதுபோக்காக மட்டுமல்லாமல், பல தரப்பட்ட பிரபலஸ்தர்களின் வாழ்வியல் சிந்தனைகளை அறிந்து கொள்ளவும் உதவும் நூல். நன்றி: தினமணி, 12/1/2015.