புதையல் ரகசியம்
புதையல் ரகசியம், தந்தி பதிப்பகம், சென்னை, விலை 165ரூ.
5000 ஆண்டுகளுக்கு முன்பு எகிப்தை ஆட்சி செய்த மன்னர்களும், ராணிகளும் தலைநகர் கெய்ரோவுக்கு 500 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள லக்சார் என்ற இடத்தில் புதைக்கப்பட்டனர். அவர்கள் மரணத்திற்குப் பிறகும் சொர்க்கத்தில் வாழ்வார்கள் என்று எண்ணி அவர்கள் உடலோடு விலை மதிப்பில்லாத புதையல்களும் புதைக்கப்பட்டன. இத்தகைய கல்லறைகளை உள்ளடக்கிய பிரமிப்பை தரும் பிரமிடுகள் உலக அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இதில் 3500 ஆண்டுகளுக்கு முன்பு எகிப்தில் இளம் வயதில் அரியணை ஏறிய மன்னர் டூடங்காமுன் 19 வயதில் மரணம் அடைந்தார். மம்மியாக்கப்பட்ட அவரது கல்லறைப் பொக்கிஷங்கள் கண்டுபிடிக்கப்பட்டது பற்றிய உண்மை வரலாற்றை ஆசிரியர் அமுதன் இந்த நூலில் சுவைபட சொல்லியுள்ளார். பக்கத்துக்குப் பக்கம் வண்ணப் படங்கள். நம்மை திகிலோடும் திகைப்போடும் எகிப்துக்கே அழைத்துச் செல்கிறார். புதையலைத் தோண்டி எடுத்து தங்கப் பொக்கிஷங்களை மட்டுமல்ல, எகிப்து நாட்டின் நாகரிகத்தையும், கலாசாரத்தையும் வெளியே கொண்டு வந்துள்ளார். நன்றி: தினத்தந்தி.
—-
தமிழகத்தை ஆண்ட அரச குலம், தமிழ்நாடு நாடார் சங்கம், சென்னை, விலை 300ரூ.
தமிழகத்தை ஆண்ட சேர, சோழ, பாண்டியர் எத்தமிழ்க் குடியின் முன்னோடிகள் என்பது பற்றி அண்மைக் காலமாகச் சில விவாதங்கள் உருவாகியுள்ளன. பல்வேறு சாதியினரும், தாங்களே மூவேந்தரின் வழிவந்தோர் என உரிமை கொண்டாடத் தொடங்கியுள்ளனர். அதன் தொடர்பாக பல்வேறு கருத்துக்களுடன் நூல்களும் வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் மூவேந்தர் யார்? எக்குலத்தவர்? என்ற கேள்விக்கான விடையைத் தக்க சான்றுகளுடன் வரலாற்று ஆய்வு நூலாக படைக்கப்பட்டுள்ளது இந்நூல். மூவேந்தர் குலம், முக்குலத்தோர், வேளாளர், ஆயவர், சான்றார், நாடன், சாணார், நாடார், கள்ளும் கள் தொழிலாளரும், பனையும் பள்ளங்களும், சான்றோர் குல உட்பிரிவுகள் ஆகிய தலைப்புகள் பற்றி முதல் பாகத்திலும் சான்றோர் குலத்தின் வீழ்ச்சி, வலங்கையர் இடங்கயைர், தமிழகத்தில் சத்திரியரே கிடையாதா? மானவீரவளநாடு, சா-சான்-சான்றோ-சான்டர்-ஷான், சேர, சோழ, பாண்டியர் பெயர் விளக்கம், சான்றோர் குல ஆழ்வார்கள், நாயன்மார்கள் ஆகிய தலைப்புகள் பற்றி 2ம் பாகத்திலும் விரிவாக தக்க சான்றுடன் விளக்கியுள்ளார் நூலாசிரியர் த. ஜெகநாதன். நன்றி: தினத்தந்தி.