சிறுகதைச் சிகரங்கள் 7
சிறுகதைச் சிகரங்கள் 7, பிரபஞ்சன், கு.அழகிரிசாமி, சூடாமணி, புதுமைப்பித்தன், லா.ச.ராமாமிர்தம், வண்ணதாசன், அசோகமித்திரம், விகடன் பிரசுரம், சென்னை, விலை ரூ750 (7 புத்தகங்களும் சேர்த்து).
என் கதைகளில் எது நல்ல கதை? எனக்குத் தெரியவில்லை. ஒவ்வொன்றும் நல்ல கதையாகத்தான் இருக்கிறது. இப்போது படித்துப் பார்க்கும்போதும் எனக்கு வாசிக்கப் பரம சுகமாக இருக்கிறது – புதுமைப்பித்தன். இப்படி ஒருமுறை சொன்னார். நூற்றாண்டுகள் கடந்த தமிழ்ச் சிறுகதைகளில் எது நல்ல கதை, எவர் மட்டும் சிறந்த கதாசிரியர் என்று எப்படித் தேர்ந்தெடுக்க முடியும், கடலிலும் முதலில் ஒரு கைதானே அள்ள முடியும்? அதுதான் இந்த முயற்சி. தமிழின் ஆகச்சிறந்த கதா, கலா ஆளுமைகளான புதுமைப்பித்தன் (சாமியாரும் குழந்தையும் சீடையும்), கு. அழகிரிசாமி (குமாரபுரம் ஸ்டேஷன்), லா.ச.ராமாமிர்தம் (உண்மையான தரிசனம்), ஆர்.சூடாமணி (நான்காம் ஆசிரமம்), அசோகமித்திரன் (விரிந்த வயல்வெளிக்கப்பால்…), பிரபஞ்சன் (இப்படியாக ஒரு சினேகிதி), வண்ணதாசன் (உயரப்பறத்தல்) ஆகிய ஏழு பேர் எழுத்துக்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட, குறிப்பிடத்தக்க சிறுகதைகள் அடங்கிய தொகுதிகள் இவை. இந்த நூற்றாண்டின் தொடக்க காலத்தில் எழுதத் தொடங்கியவர்கள்முதல் இன்றும் எழுதிக்கொண்டு இருப்பவர்கள் வரையிலான இந்தத் தொகுப்பு தமிழ் இலக்கியத்தின் மிக நீண்ட தூரப்பயணத்தை மெல்லிய கோடாக இணைக்கிறது. “இரவு சாப்பிட்டுப் படுத்தபிறகு அவள் தனக்கு ‘நன்றி’ சொல்லாமல் போனது ஞாபகம் வந்தது. சர்வசாதாரணமாக எளிய பகுதிகளைக்கூடப் புரிந்துகொள்ளாத மோசமான கல்வித்தரம் நினைவுக்கு வந்தது. பல வகுப்புகளில் பெயிலாகியிருப்பான் என்று நினைத்தான். அழகாக இருந்தாலும் புத்திக்கூர்மை இல்லை. அத்துடன் நன்றி உணர்ச்சியும் இல்லை. எது இல்லாமல் போனால்தான் என்ன? அழகு இருந்தது.அப்புறம் இல்லாத எதைப்பற்றித்தான் என்ன கவலை?” – கு. அழகிரிசாமியின் வரிகள் இப்போது படித்தாலும் சுகன்யா என்ற அந்தக் கதாபாத்திரத்தை நோக்கி மனதை நகர்த்தும் வலிமை கொண்டவை. “ஜோவின் கடிதத்தைப் படித்தாலும் அழுகைதான் வந்தது. ஜோ கோடு போட்ட தாளில் எழுதி இருந்தான். ஜோவின் கையெழுத்து வழக்கம்போல் மோசமாகவே இருந்தது. கையெழுத்து எப்படி இருந்தால் என்ன? ஜோ எப்போதும் சிரிக்கிறவன்”- வண்ணதாசன் வரிகள் ஜோவை தேடவைக்கும். ‘எழுத்தாளனின் சொத்து அவனுடைய எழுத்துதான்’ என்று லா.ச.. ஒருமுறை சொன்னார். அந்த சொத்துகளை ஏழு புத்தகங்களாக ஒருசேரப் படிக்கும்போது… புதுமைப்பித்தனின் வாழ்க்கை, கு. அழகிரிசாமியின் யதார்த்தம், லா.ச.ரா-வின் தர்க்கம், சூடாமணியின் கலக்கம், அசோகமித்திரனின் எளிமை, பிரபஞ்சனின் அறம், வண்ணதாசனின் நளினம்… ஆகியவற்றை ஒன்றாக தரிசிக்கலாம். தமிழுக்குத்தான் எத்தைனைப் பரிமாணங்கள். -புத்தகன். நன்றி: ஜுனியவர் விகடன், 11/3/2015.