சங்கீத வித்துவான்கள் சரித்திரம்

சங்கீத வித்துவான்கள் சரித்திரம், உ.வே. சாமிநாதையர், பதிப்பாசிரியர் மகாவித்துவான் வே. சிவசுப்பிரமணியன், முனைவர் கோ. உத்திராடம், டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம் வெளியீடு, சென்னை, பக். 112, விலை 80ரூ.

இசையும் தமிழ்த் தாத்தாவும் தமிழ், தெலுங்கு, கன்னட, மகாராஷ்டிர வாய்ப்பாடு மற்றும் வாத்திய இசை வித்துவான்கள் 402 பேர்களைப் பற்றி நூறு ஆண்டுகளுக்கு முன் தமிழ்த் தாத்தா உ.வே.சா. எழுதிய குறிப்புகளின் தொகுப்புதான் ‘சங்கீத வித்துவான்கள் சரித்திரம்’ என்ற நூல். 1914ல் எழுதப்பட்ட வித்துவானக்ள் பற்றிய குறிப்புகள் இப்போதுதான் நூலாக அச்சிடப்பட்டுள்ளது. உ.வே.சாவின் குறிப்புகள் காலத்தால் சிதைந்துவிடாமல் பாதுகாக்கப்பட்டு, மகாவித்துவான் வே. சிவசுப்பிரமணியன், முனைவர் கோ. உத்திராடம் ஆகியோரால் நூலாகப் பதிப்பிக்கப்பட்டுள்ளது. திருவையாறு தியாகப்பிரம்மம் நாதோ பாசகர் இசையில் மாமேதையாக வேண்டுமென்கிற ஆசையில் தனது குருவான ஹொண்டி சாம்பையரிடம் 18 ஆண்டுகள் குருகுலவாசம் செய்தார். மோகனம் வரதராஜ ஐயர் பூர்ணசந்திர உதயத்தில் குளக்கரையில் அமர்ந்து பாடும் மோகனராகம் கேட்க, உடையார்பாளையம் மகாராஜா யுவரங்க பூபதி பரதேசி வேடமிட்டு வந்தார். வீணை இசையில் தன்னைத் தோற்கடித்த மகனின் கையில் முத்தமிட்டுப் பாராட்டுவதுபோல் பிடித்து, வீணை வாசிக்க முடியாதபடி விரல்களைக் கடித்துவிட்ட பிறகும், உருக்கினால் கவர் செய்து அணிந்துகொண்டு வாசித்தவர் மகான் வேங்கட சுப்பையர். இப்படி சுவையான பல குறிப்புகள் இந்நூலின் வழி அறிய கிடைக்கின்றன. தமிழிசை குறித்தும், இசை வித்துவான்கள் பற்றியும் ஆராய விரும்புபவர்களுக்கு அருமையான வழிகாட்டி இந்நூல். -மு.முருகேஷ். நன்றி: தி இந்து.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *