சுவாமி விவேகானந்தர் பற்றி மகாகவி பாரதியார் கூறியவை
சுவாமி விவேகானந்தர் பற்றி மகாகவி பாரதியார் கூறியவை, தொகுப்பாசிரியர் சுவாமி கமலாத்மானந்தர், ஸ்ரீராமகிருஷ்ண மடம், சென்னை, பக். 440, விலை 200ரூ.
மகான் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் ஆத்மார்த்த சீடரான சுவாமி விவேகானந்தர், 19ஆம் நூற்றாண்டின் மிகப் பெரும் சிந்தனையாளர்களில் ஒருவர். இவர் ஆன்மீகம், அறிவியல், இலக்கியம், கலை, பெண்கள் முன்னேற்றம், பாமரர் முன்னேற்றம், மானிட முன்னேற்றம், சமூக சீர்திருத்தம், அரசியல் சிந்தனைகள், தேச முன்னேற்றம், விடுதலை வேட்கை, உலகம் தழுவிய கொள்கைகளின் வீச்சு… போன்ற உயர்ந்த சிறந்த சிந்தனைகளையும், செயல்பாடுகளையும் கொண்ட வேதாந்தி. 20ஆம் நூற்றாண்டின் ஆரம்ப கட்டத்தில் தமிழகத்தில் வாழ்ந்த மகாகவி பாரதியும் இது போன்ற தளங்களில் உலாவிய மாமனிதர். இவ்விருவரும் தங்களின் கொள்கைகளுக்கு ஏற்ப வாழ்ந்தும், போதித்தும், மனித குலத்திற்கு வழிகாட்டிய சீலர்கள், தேச பக்தியும், தெய்வ பக்தியும் நிரம்பிய இவ்விருவரையும் இன்றைய தலைமுறையினருக்கு எடுத்துரைக்கும் பொருட்டு உருவானதே இந்நூல். மதுரை ஸ்ரீராம கிருஷ்ண மடத்தின் தலைவராகிய இந்நூலாசிரியர், மகாகவி பாரதி தனது படைப்புகளில் ஆங்காங்கே சுவாமி விவேகானந்தரைப் பற்றிக் குறிப்பிட்டவற்றையெல்லாம் இந்நூலில் தொகுத்துள்ளார். இதுதவிர, சுவாமி சுபேதானந்தர், தான் குருவாக ஏற்பிப் போற்றிய சகோதரி நிவேதிதை போன்றவர்களைக் குறித்த பாரதியாரின் சிந்தனைகளுடன், மற்ற பெரியோர்களின் கருத்துக்களும் இந்நூலில் விரிவாகத் தொகுக்கப்பட்டுள்ளது. தன் வாழ்நாளில் பெரும் பகுதியை பாதியின் படைப்புகளைத் தேடித் தேடிப் பதிப்பித்து வரும் சீனி.விசுவநாதனே, என் அளவில் – எனக்குத் தோன்றாத ஒரு பணி இந்த நூல்’ என்று தனது அணிந்துரையில் இந்நூலைப் பாராட்டியுள்ளது சாலப் பொருந்தும்! -பரக்கத். நன்றி: துக்ளக், 11/3/2015.